புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: அரசு சொல்வதை மக்கள் கேட்கவில்லை என்றால், ஊரடங்கு உத்தரவை மீண்டும் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. நாம் அதிகப்படியான கொரோனா பரிசோதனை செய்தால்தான் கொரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டுபிடித்து உடனே சிகிச்சை அளிக்க முடியும். எனவேதான், கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். இதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\r எந்தெந்த பகுதிகளில் கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்களோ அவர்களது வீட்டுக்கு மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் சென்று பரிசோதனை செய்கின்றனர். அவர்களுக்கு சுவாசக் கோளாறு இருந்தால் உடனே மருத்துவமனையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டெல்லி, தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. முதலமைச்சரின் கோவிட் நிவாரணத்தில் இருந்து ரூ.1.2 கோடிக்கு 50 ஆயிரம் ஆர்டி-பிசிஆர் கருவிகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களிடம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள், திருவிழாக்களில் கலந்து கொள்ளாதீர்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.\r இருப்பினும் மக்கள் கடைப்பிடிப்பதில்லை. கொரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த ஒருபுறம் நாம் முயற்சி செய்தால், மற்றொரு புறம் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. கொரோனா தொற்றைப் பற்றி மக்கள் கண்டுகொள்வதில்லை. விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கோயில், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் தாராளமாகக் கலந்து கொள்கின்றனர். எச்சரிக்கையாக இருப்பதில்லை. இதனால் பல பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது. இதற்குக் காரணம் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான். இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய், சுவாச கோளாறு உள்ளவர்கள் கொரோனா தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அது செப்டம்பர் வரை செல்லும் என்று நினைக்கிறேன். எனவே மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செயல்பட்டால் கொரோனா தொற்றின் தாக்கத்தைக் குறைக்க முடியும். மக்கள் அரசு சொல்வதைக் கேட்கவில்லை என்றால், ஊரடங்கு உத்தரவை மீண்டும் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

மூலக்கதை