தொழில்துறைக்கு விடிவுகாலம்: ஜவுளித்துறையினர் காத்திருப்பு

தினமலர்  தினமலர்
தொழில்துறைக்கு விடிவுகாலம்: ஜவுளித்துறையினர் காத்திருப்பு

சோமனுார்:ஊரடங்கு, வைரஸ் பரவல், தொழிலாளர் பற்றாக்குறை, வெளிமாநிலங்களுக்கு லாரி இயக்குவது நிறுத்தி வைத்திருப்பதால், சோமனுார் வட்டாரத்தில், பல லட்சம் மீட்டர் துணி ரகங்கள் தேங்கியுள்ளன.சோமனுார், கருமத்தம்பட்டி, வாகை, கண்ணம்பாளையம் சுற்றுவட்டாரத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன.
தினமும் பல லட்சம் மீட்டர் துணி ரகங்கள் உற்பத்தியாகின்றன.சுல்சர், ரூடிசி உள்ளிட்ட நவீன விசைத்தறிகளில், அதிகமான அளவில் துணி உற்பத்தி நடக்கிறது. துணிகள் பேல்களாக கட்டப்பட்டு, லாரிகளில், வட மாநிலங்களுக்கு தினமும் அனுப்பப்படும். ஊரடங்கு தளர்வுக்கு பின், கடந்த ஒரு மாதமாக, மீண்டும் உற்பத்தி நடக்கிறது. இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு லாரிகள் இயக்க முடியாததால், லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 'ஒரு லாரியில், 20 டன்னுக்கு மேல் பேல்கள் ஏற்ற வேண்டும். உள்ளூர் ஆட்களை அழைத்தால், பல மடங்கு அதிகமாக கூலி கேட்கின்றனர். அவ்வளவு கூலியை எங்களால் கொடுக்க முடியாது.
கொடுத்தாலும், இறக்கும் இடத்தில், பணம் வாங்க முடியாது. அதனால், வடமாநில தொழிலாளர்கள் வந்தபிறகே, லாரிகளை இயக்க வேண்டிய நிலை உள்ளது' என்றனர்.ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தை விட, கோவை மாவட்டத்தில் தான், 80 சதவீத துணி ரகங்கள் உற்பத்தியாகின்றன. அவற்றை விற்க, வட மாநிலங்களுக்கு அனுப்பினால் மட்டுமே எங்களது தொழில் நடக்கும். தற்போது லாரிகள் இயக்கப்படாததால், பல லட்சம் மீட்டர் துணிகள், குடோன்களில் தேங்கியுள்ளன' என்றனர்.

மூலக்கதை