அமெரிக்க தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவாரா? ரஷ்யா வேணும்னு சொல்லுது சீனா வேணாம்னு சொல்லுது: வெளிநாடுகள் தலையீடு பற்றி உளவுத்துறை பகீர்

தினகரன்  தினகரன்
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவாரா? ரஷ்யா வேணும்னு சொல்லுது சீனா வேணாம்னு சொல்லுது: வெளிநாடுகள் தலையீடு பற்றி உளவுத்துறை பகீர்

வாஷிங்டன்: வரும் நவம்பரில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யாவும், எதிராக சீனாவும் செயல்பட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம், அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம், பொருளாதாரம், தலைவர்கள் என உலக நாடுகளில் பலவற்றின் தலையெழுத்தை நிர்ணயித்து வருகிறது அமெரிக்கா. தற்போது, அமெரிக்காவில் யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்க, பல்வேறு உலக நாடுகள் மறைமுகமாக போட்டிப் போடுகின்றன. கடந்த 2016 தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல், இந்த தேர்தலிலும் ரஷ்யா மட்டுமின்றி, சீனா, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளின் தலையீடு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை பகிரங்கமாகவே குற்றம்சாட்டி இருக்கிறது. அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி தரப்பில் ஒபாமா அதிபராக இருந்த போது, துணை அதிபராக பதவி வகித்த ஜோ பிடென் போட்டியில் இருக்கிறார். ஆரம்பத்தில் டிரம்புக்கு இருந்த செல்வாக்கு இப்போது கணிசமாக குறைந்து விட்டது. பிடெனின் செல்வாக்கு உயர்ந்து, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க உளவுப்பிரிவு இயக்குநர் வில்லியன் இவானினா, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருப்பதாக பல அதிர்ச்சி தகவல்களை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார். அதில், ‘டிரம்புக்கு ரஷ்யா மறைமுக ஆதரவளித்து, பிடெனை இழிவுபடுத்தி வருகிறது. அதே நேரம், டிரம்ப் 2வது முறை அதிபராக கூடாது என்பதில் சீனா கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதனால், அவரை பற்றி விமர்சித்து வருகிறது. இருநாடுகளும் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் உளவுத்துறைகளை முடுக்கி விட்டுள்ளன. அமெரிக்க அதிபராக பிடென் வெற்றி பெற்றால், நட்பு நாடான உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு மறுவடிவம் கொடுக்கக் கூடும் என்பதால் ரஷ்யா, அவர் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என நினைக்கிறது,தேர்தல் முடிவுகள், வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்புவதன் மூலம் தேர்தல் உள்கட்டமைப்பை சீர்குலைக்க ரஷ்யா, சீனா, ஈரான் அரசுகள் முயற்சிக்க வாய்ப்புள்ளது. இது தவிர, வேறு வழிகளிலும் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கலாம். பல வெளிநாடுகள் தங்கள் வெளிப்படையான, தனிப்பட்ட அறிக்கைகளின் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தெரிவிப்பார்கள். அதே நேரம், அந்த ரகசியத்தை செல்வாக்காக மாற்ற முயற்சிப்பது அரிது,’’ என கூறினார்.உளவுப்பிரிவின் இந்த அறிக்கைக்கு பதிலளி த்துள்ள டிரம்ப் நிர்வாகம், `தேர்தல் நடைமுறையில் வெளிநாடுகள் தலையிடுவதை அமெரிக்கா ஒருநாளும் பொறுத்து கொள்ளாது. அதுமுறியடிக்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவையும் சீனா சொந்தமாக்கி கொள்ளும்உளவுத்துறையின் தகவல் பற்றிய கேள்விக்கு டிரம்ப் நேற்று அளித்த பதிலில், ``பிடெனை ரஷ்யா இழிவுபடுத்தவில்லை. நான் இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்று ரஷ்யா  நினைக்கிறது போலும். ஏனெனில், அவர்களிடம் என்னை விட மிகவும் கண்டிப்புடன்  நடந்து கொண்டவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது,’’ என்றார். அதேநேரம், சீனா குறித்த கேள்விக்கு, ``நான் மீண்டும் அதிபராக  தேர்ந்தெடுக்கப்படுவதை சீனா ஒருநாளும் விரும்பாது. பிடென் அதிபரானால் சீனா,  அமெரிக்காவையும் தனக்கு சொந்தமாக்கி விடும்,’’ என்றார்.

மூலக்கதை