கொரோனா பரவ அதிகளவில் சாத்தியம் மளிகைக் கடை ஊழியர்கள், வியாபாரிகளுக்கு சோதனை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
கொரோனா பரவ அதிகளவில் சாத்தியம் மளிகைக் கடை ஊழியர்கள், வியாபாரிகளுக்கு சோதனை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘மளிகைக்கடை ஊழியர்கள், தெருக்களில் காய்கறி விற்று வரும் வியாபாரிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ சாத்தியக்கூறுகள் உள்ளதால் அவர்களை முதலில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்,’ என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரங்களில் நாள்தோறும் 50 ஆயிரம் பேர் வைரசால் பாதித்து வந்த நிலையில், தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கு பேர் மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது: கொரோனா பரவல் தற்போது பெரியளவில், புதிய பகுதிகளுக்கு பரவி வருகிறது. இது, தீவிர நிலையை அடைவதற்கு முன்பாக அடையாளம் காணப்பட்டு, தொற்றுள்ளவர்கள் தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சுதாகார மையங்களில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம், இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தலாம். இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானதும், கடந்த 2 நாட்கள் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பேரையாவது அடையாளம் கண்டு, 72 மணி நேரத்தில் தனிமைப்படுத்த வேண்டும்.குடிசைப் பகுதி, சிறைச்சாலை, முதியோர் இல்லம் போன்ற இடங்களில் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இது தவிர, மளிகைக்கடை ஊழியர்கள், தெருக்களில் காய்கறி விற்று வரும் வியாபாரிகள்  மூலமாக  அதிகளவில் பரவும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால், முதலில் இவர்களை  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பாதிப்பு 21 லட்சமானதுநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கொரோனா பாதிப்பு, இறப்பு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய சுகாதார துறை நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள விவரம்:* கடந்த 10 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 50 ஆயிரத்தை கடந்து வருகிறது.* நேற்று ஒரே நாளில் புதிதாக 61,537 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,88,611 ஆக அதிகரித்துள்ளது.* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 933 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்தம் பலி எண்ணிக்கை 42,518 ஆக உயர்ந்துள்ளது. * இதுவரை, 14,27,005 பேர் குணமடைந்து உள்ளதால், குணமானோர் சதவீதம் 68.32 ஆக அதிகரித்துள்ளது. * தற்போது, 6,19,088 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். * நேற்று முன்தினம் 5,98,778 பேரிடம் இருந்து சேகரித்த மாதிரிகளுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 171 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* இந்நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை நேற்றிரவு 21 லட்சத்தை கடந்தது.200 டாக்டர்கள் உயிர்த்தியாகம் இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு முழுவதிலும் இதுவரை 196 மருத்துவர்கள் உயர்த் தியாகம் செய்துள்ளனர். இவர்களில் 170 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 40 சதவீதம் பேர் பொது மருத்துவர்கள். காய்ச்சல் என்றதும் மக்கள் முதல் கட்டமாக இவர்களையே நாடுகின்றனர். இதனால், இந்த மருத்துவர்களே முதலில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவு மருத்துவர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு காப்பீடு வழங்க, பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை