மோடி இன்று தொடங்கி வைக்கிறார் ரூ.1 லட்சம் கோடிக்கு விவசாய நிதி திட்டம்

தினகரன்  தினகரன்
மோடி இன்று தொடங்கி வைக்கிறார் ரூ.1 லட்சம் கோடிக்கு விவசாய நிதி திட்டம்

புதுடெல்லி: வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் மூலம், விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடனுதவி அளிப்பதற்கான திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த மே மாதம் 12ம் தேதியன்று ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்தினை அறிவித்தார். அதில், ஒரு லட்சம் கோடி வேளாண் கட்டமைப்புக்கும் ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார். அந்த திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட பிறகான விவசாயப் பணிகளுக்கு இந்த நிதி செலவழிக்கப்படும். அறுவடை செய்த வேளாண் பொருட்களைப் பாதுகாப்பது, அவற்றை பல இடங்களிலும் இருந்தும் பெற்றுக் கொள்வது, அவற்றை குளிர்சாதன வசதியுடன் கூடிய பாதுகாப்பு மையங்களை அமைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துதற்காக இந்த நிதி செலவிடப்படும். விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரையில் உத்தரவாத கடனும் வழங்கப்படும். இதன்மூலம், வேளாண் பொருட்கள் வீணாகாமல் பாதுகாப்பதுடன் பொருளுக்குண்டான தகுதியான விலைக்கும் விவசாயிகளால் விற்க முடியும். இந்த  திட்டத்துடன் பிரதமர் கிசான் திட்ட அடிப்படையில், ஆறாவது தவணையாக 17 ஆயிரம் கோடியை 8.5 கோடி விவசாயிகளுக்கு மோடி வழங்குகிறார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள், அதிகாரிகளுடன் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொள்கிறார்.

மூலக்கதை