தொடர்ச்சியாக 19 நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை திடீர் சரிவு

தினகரன்  தினகரன்
தொடர்ச்சியாக 19 நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை திடீர் சரிவு

* சவரனுக்கு ₹248 குறைந்தது * நகை வாங்குவோர் சற்று நிம்மதிசென்னை: தொடர்ச்சியாக 19 நாட்கள் உயர்ந்து தினந்தோறும் வரலாற்று சாதனை படைத்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென சரிந்தது. சவரனுக்கு ₹248 குறைந்து ஒரு சவரன் ₹43,080க்கு விற்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தங்கம் விலை மட்டும் அதிரடியாக உயர்ந்து வந்தது. அது மட்டுமல்லாமல் கடந்த மாதம் 20ம் தேதி முதல் தங்கம் விலை தினந்தோறும் உயர்வை சந்தித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் தங்கம் விலை மேலும் அதிகரித்து, ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. அதுவும் தினந்தோறும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி வந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை தொடர்ந்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ₹42 அதிகரித்து ஒரு கிராம் ₹5,416க்கும், சவரனுக்கு ₹336 அதிகரித்து ஒரு சவரன் ₹43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்திருந்தது. வரும் நாட்களில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ₹50 ஆயிரத்தை தொடும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறி வந்தனர். அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 19 நாட்களில் மட்டும் சவரன் சுமார் ₹5,712 அளவுக்கு உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் படைத்திருந்தது.இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை “திடீரென” சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ₹31 குறைந்து ஒரு கிராம் ₹5,385க்கும், சவரனுக்கு ₹248 குறைந்து ஒரு சவரன் ₹43,080க்கும் விற்கப்பட்டது. அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

மூலக்கதை