மறக்க முடியுமா? - இது நம்ம ஆளு

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  இது நம்ம ஆளு

படம் : இது நம்ம ஆளு
வெளியான ஆண்டு : 1988
நடிகர்கள் : கே.பாக்யராஜ், ஷோபனா, சோமயாஜுலு, கலைஞானம், குமரிமுத்து
இயக்கம் : பாலகுமாரன்
தயாரிப்பு : பகவதி கிரியேஷன்ஸ்

கதை, திரைக்கதை, பாடல்கள், இசை என, கே.பாக்யராஜின் பன்முக ஆற்றலோடு வெளிவந்த படம், இது நம்ம ஆளு. இப்படத்திற்கு, பிராமணர் சமூகத்தில் இருந்து, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்பார்த்து தான், படத்தின் இயக்கத்தை, பாலகுமாரனிடம் ஒப்படைத்த, கே.பாக்யராஜ், 'இயக்கம் மேற்பார்வை' என, தன் பெயரை இணைத்துக் கொண்டார்.

பி.ஏ., பட்டதாரியான கோபால், வறுமை காரணமாக, 'பிராமணர்' எனக் கூறி, கண்டிப்புமிக்க சீனிவாச சாஸ்திரி வீட்டிற்கு செல்கிறார். அங்கு அனைவரின் அன்பை பெறும் கோபாலை, சீனிவாச சாஸ்திரியின் மகள் பானுமதி விரும்புவாள். சில தடைகளுக்கு பின், இருவருக்கும் திருமணம் நடக்கும். அதன்பின் தான், கோபால் யார் என்பது தெரியவரும். இதை தொடர்ந்து எழும் சிக்கல்களை, சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி இருப்பார், பாக்யராஜ்.

சீனிவாச சாஸ்திரியாக, சோமயாஜுலு. அந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும், அவ்வளவு பொருத்தமாக இருக்க மாட்டார். 'மீண்டும் ஷோபனா' என்றே, இப்படத்தில் அவருக்கு அறிமுகம் கிடைத்தது.

பாக்யராஜ் இசையில், 'அம்மாடி இது தான் காதலா, நான் ஆளான தாமரை, பச்சமலை சாமி, சங்கீதம் பாட...' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. இதில், 'பச்சமலை சாமி ஒண்ணு...' பாடலை, அவரே பாடினார்.

பெரும் வெற்றி பெற்ற இப்படம், மூன்று முறை, 'ரீமேக்' செய்யப்பட்டது. 1996ல், மோகன் பாபு நடிப்பில், அதிரிந்தி அல்லுடு என, தெலுங்கிலும்; ஜாகேஷ் நடிப்பில், அலியா அல்ல மகளா; காந்தா மற்றும் ரவிசந்திரன் நடிப்பில், ரவி சாஸ்த்ரி என, கன்னடத்திலும், 'ரீமேக்' செய்யப்பட்டது.

தமிழக மக்கள், இது நம்ம ஆளு என, பாக்யராஜை கொண்டாடிய காலம் அது!

மூலக்கதை