மறக்க முடியுமா? - உன்னால் முடியும் தம்பி

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  உன்னால் முடியும் தம்பி

படம் : உன்னால் முடியும் தம்பி
வெளியான ஆண்டு : 1988
நடிகர்கள் : கமல், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா
இயக்கம் : கே.பாலசந்தர்
தயாரிப்பு : கவிதாலயா

கடந்த, 1988ல் தெலுங்கில், பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம், ருத்ரவீணை. சிரஞ்சீவி, ஷோபனா, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர். இதை, அதே ஆண்டு தமிழில், உன்னால் முடியும் தம்பி என, கமல் நடிப்பில் உருவாக்கினார், கே.பாலசந்தர். இரு படங்களுக்கும், இளையராஜா தான் இசை. ருத்ரவீணைக்கு சிறந்த இசை உட்பட, மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

பிரபல சமூக சேவகர், எம்.எஸ்.உதயமூர்த்தி, இயக்குனர், கே.பாலசந்தரின் கல்லுாரித் தோழர். அவரது, 'உன்னால் முடியும் நம்பு' என்ற சொற்றொடரையே, சற்று மாற்றி, உன்னால் முடியும் தம்பி என, படத்திற்கு பெயர் வைத்ததுடன், கதாநாயகனுக்கு, 'உதயமூர்த்தி' என்று பெயரிட்டார், கே.பாலசந்தர்.

பிரபல இசை கலைஞரான, - பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையின் இளைய மகனான உதயமூர்த்தி, சங்கீதத்தை விட, மனிதாபிமானமே உயர்ந்தது என்ற கொள்கை உடையவன். தந்தையும், மகனும் எதிரெதிர் கொள்கையில் வாழ, மது போதையில் அடிமையாகி இருக்கும் கிராம மக்களை மீட்க, தன் மனைவியுடன் களமிறங்கி, உதயமூர்த்தி போராடுகிறான். அவன் எதிர்கொண்ட போராட்டங்கள் என்ன, அதில் வெற்றி பெற்றனா என்பது தான், திரைக்கதை.

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையாக, ஜெமினி கணேசன் வாழ்ந்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு உரிய கண்டிப்பையும், கோபத்தையும் கண்களிலேயே வெளிப்படுத்தி இருப்பார்.

கே.பாலசந்தரின் படத்தில், கதாநாயகிக்கு உரிய முக்கியத்துவம் இருக்கும். இதில், சமூக போராளியாக சீதா, 'பின்னி'யிருப்பார். புலமைப்பித்தன், முத்துலிங்கம் ஆகியோர் பாடல்களை எழுதினர். 'என்ன சமையலோ...' என்ற பாடலை, இளையராஜா எழுதினார். 'அக்கம் பக்கம் பாரடா, இதழில் கதை, மானிட சேவை, புஞ்சை உண்டு, உன்னால் முடியும் தம்பி...' என, அனைத்து பாடல்களும், 'ஹிட்' ஆகின.

மூலக்கதை