மறக்க முடியுமா? - குரு சிஷ்யன்

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  குரு சிஷ்யன்

படம் : குரு சிஷ்யன்
வெளியான ஆண்டு : 1988
நடிகர்கள் : ரஜினி, பிரபு, கவுதமி, சீதா
இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்
தயாரிப்பு : பஞ்சு அருணாசலம்

பண பிரச்னையில் சிக்கித் தவித்த, பஞ்சு அருணாசலத்திற்காக, கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்க, ரஜினி சம்மதித்தார். ஆனால், எஸ்.பி.முத்துராமன், ரஜினியின், 25 நாட்கள் கால்ஷீட்டில், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தை உருவாக்கிக் கொடுத்தார். அது தான், குரு சிஷ்யன்!

சுல்கா பட்சா என்ற ஹிந்திப் படத்தை தழுவி, இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ரஜினியும், பிரபுவும் இணைந்து நடித்த முதல் படம். இப்படத்தில் தான், கவுதமி அறிமுகம். சோ, வினு சக்ரவர்த்தி, மனோரமா, ராதாரவி என, நட்சத்திர படையே நடித்திருந்தது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது.

சிறு திருட்டுகளில் ஈடுபடும், குரு ரஜினியும், சிஷ்யன் பிரபுவும், துாக்குத் தண்டனை கைதியான பாண்டியனுக்கு உதவுவதற்காக, வில்லன் கூடாரத்துக்குள் ஊடுருவுகின்றனர். இதில், 20 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் பதுங்கியுள்ள ரகசிய இடத்தை கண்டுபிடிக்கின்றனர் என்பது தான், கதை.

இதில், சென்டிமென்ட், துரோகம், சண்டை, பாடல்கள், நிறைய நகைச்சுவை துாவி, மசாலா படத்தைத் தந்திருந்தார், எஸ்.பி.முத்துராமன். இளையராஜா இசையில், ஜிங்கிடி ஜிங்கிடி, கண்டுபிடிச்சேன், நாற்காலிக்கு சண்டை, வா வா வஞ்சி இளம் மானே... உள்ளிட்ட பாடல்கள், ரசிகர்களை தாளம் போட செய்தன.

ஜிங்கிடி, ஜிங்கிடி... பாடலை, இளையராஜாவே எழுதினார். மொத்தம், 28 நாட்களில் எடுத்த படம், 175 நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரமானது. திட்டமிடுதல் சரியாக இருந்தால், முடிவு வெற்றிகரமாக இருக்கும் என்பதற்கு, குரு சிஷ்யன் படமே, சரியான உதாரணம்!

மூலக்கதை