கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப் படுவதால், ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் தண்டோரா மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரு கிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

இதையடுத்து  பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடி வரை உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருமாநில எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.

அங்கிருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கும் பாய்ந்தோடி வருகிறது. நேற்று காலை பிலிகுண்டுலுவில் 36 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 39 ஆயிரம் கனஅடியானது.



இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் ஐவர்பாணி, மெயின்அருவிகளில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்கிறது.

இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் காலை 64. 20 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 70. 05 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்இருப்பு 32. 74டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும், திறப்பும் இதேநிலையில் நீடித்தால் 10 தினங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர வாய்ப்புள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியதால், பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த நந்தி சிலை மீண்டும் நீரில் மூழ்கியது. மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் காவிரிநீர் தேங்கியதால் நீரின் வேகம் குறைந்தது.

இதனால் இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியை தொடங்கினர். சொட்டவாளை, சோனாங்கெழுத்தி, கட்லா, ரோகு உள்ளிட்ட மீன்வகைகள் அதிகளவில் பிடிபடுகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதி களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இன்று காலை பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் வருவாய்த்துறை சார்பில் தண்டோரா போடப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

.

மூலக்கதை