மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு

திருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழக தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் மண்ணுக்கு அடியில் சிக்கிய 54 பேரை ேதடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மூணாறில் இருந்து 18 கி. மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இப்பகுதியையொட்டி தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் தமிழக தொழிலாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

நிலச்சரிவில் தேயிலை தோட்டம் முழுவதுமாக இடிந்து தொழிலாளர்களின் வீடுகள் மீது விழுந்தது. இதில் 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன.

வீடுகளில் இருந்த அனைவரும் தூக்கத்திலேயே மண்ணிற்குள் புதைந்தனர். இரவு நேரம் என்பதால் இந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை.



நேற்று காலை 6 மணியளவில் தான் விவரம் தெரிந்தது. தொடர்ந்து 3 நாட்களாக பெய்த தொடர் மழையாலும், ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாலும் சாலைகளில் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்து சுமார் 10 மணி நேரத்திற்கு பின்னரே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடிந்தது. முதலில் 4 உடல்கள் மீட்கப்பட்டன.

பின்னர் 13 உடல்கள் மீட்கப்பட்டன. 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் 21 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவருமே மண்ணுக்கு அடியில் புதைந்தனர்.

தற்போது 18 பேர் இறந்த நிலையில் அவர்களின் உடல்களும், 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 54 பேர் மண்ணுக்குள் சிக்கியுள்ளனர்.

நேற்று பெரும் சிரமத்திற்கு இடையே மீட்பு பணிகள் நடந்தன. விபத்து நடந்த இடத்திற்கு செல்லும் பாதைகள் மிக மோசமாக இருந்ததால் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்ல முடியவில்லை.



போலீசார், தீயணைப்பு படையினர், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் தான் மீட்பு பணிகள் ஈடுபட்டனர். விமான படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மோசமான காலநிலை காரணமாக ஹெலிகாப்டர் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

நேற்று மாலை தான் 58 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை விபத்து நடந்த இடத்தை அடைந்தது. அதற்குள் இருட்டி விட்டதால் நேற்று இவர்களால் மீட்பு பணியை தொடங்க முடியவில்ைல.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தொடங்கியது. மீட்பு பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் மண், மற்றும் பாறாங்கற்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து தேடும்பணி வேகமாக நடந்து வருகிறது.

நிலச்சரிவு நடந்து 30 மணிநேரத்துக்கு மேலாகிவிட்டதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. பூமிக்குள் புதைந்துள்ள 54 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இறந்தவர்கள் யார்?

நிலச்சரிவில் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் பலியாகியுள்ளனர்.

இவர்களில் காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43), கவுசல்யா (25), தவசியம்மாள் (42), சிந்து (13), நிதிஷ் (25), பன்னீர்செல்வம் (50), கணேசன் (40) ஆகிய 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தென்காசி மாவட்டம், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

.

மூலக்கதை