கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பரிதாபமாக இறந்தனர். 162 ேபர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் துபாயில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 7. 41 மணியளவில் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்தது. விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 2 பைலட் உட்பட 6 ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர்.

அப்போது பலத்த மழை பெய்து ெகாண்டிருந்தது. பைலட் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை தரையிறக்கினார்.

ஓடுபாதையில் விமானம் நிற்க வேண்டிய நிலையில் வந்தபோது திடீர் என பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர் 35 அடி பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது.

இதில் விமானிகள் அறையில் இருந்து விமானத்தின் முன்பக்க வாசல் வரையிலான பகுதிவரை இரண்டாக பிளந்தது. விமான பயணிகள் அலறித்துடித்தனர்.

உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் பைலட் தீபக் வசந்த் சாத்ேத, உதவி பைலட் அகிலேஷ்குமார் உட்பட 19 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பலியானவர்கள் கோழிக்ேகாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மேலும் காயமடைந்த 162 ேபர் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

பைலட் தீபக் வசந்த் சாத்தே விமானத்தை தரையிறக்கியபோது ஓடுதளத்தில் விமானம் லேசாக வழுக்கியது. இதையடுத்து அவர் மீண்டும் விமானத்தை மேலே எழுப்ப முயன்றார்.

ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் வேகமாக சென்று சுவரில் மோதி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பலத்த மழையால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி நின்றதும், விமானிக்கு ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததும் விபத்துக்கு காரணங்கள் என கூறப்படுகிறது.

விமான நிலையம் மூடல்

விபத்தை தொடர்ந்து விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

விபத்தில் இறந்த பைலட் தீபக் வசந்த சாத்தே இந்திய விமானப்படையில் போர் விமான பைலட்டாக 22 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதன்பின் இந்தியன் ஏர்லைன்ஸில் பணியில் சேர்ந்தார்.

இவர் விமானப்படையில் பணிபுரிந்தபோது பலமுறை சிறந்த பைலட்டுக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

மிகப்பெரிய விபத்து

1998 ஜூலை 30ம் தேதி லட்சத்தீவில் இருந்து கொச்சிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸின் ஒரு சிறு பயணிகள் விமானம் தரையிறக்கும்போது விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் இருந்த 8 பேர் பலியாயினர்.

இதுதான் கேரளாவில் நடந்த பெரிய விபத்தாகும். அதன்பிறகு இந்த கோர விபத்து நடந்துள்ளது.

முதல்வர் பழனிசாமி இரங்கல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: நேற்றிரவு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து  சுமார் 191 நபர்களுடன் கேரள மாநிலம், கோழிகோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்திய விமானம், தரையிரங்கும் போது விபத்துக்குள்ளாகியதில், விமானி உள்பட 18 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெரும்பாலான பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் வந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

காயமடைந்தவருக்கு கொரோனா

விமான விபத்து குறித்து அறிந்தவுடன் மீட்பு பணியில் ஈடுபட போலீசாருடன் அப்பகுதி மக்களும் திரண்டனர்.

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சமூக சேவகர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு கோழிக்ேகாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.   இந்த நிலையில் காயமடைந்த ஒருவருக்கும், மரணமடைந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய குழுக்கள் வருகை

விமான விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சிவில் விமான போக்குவரத்தின் 2 குழுக்கள் கோழிக்கோடு வந்துள்–்ளன. இக்குழுதான் விமான விபத்து எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தும்.

இந்தநிலையில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளீதரன் கோழிக்கோடு வந்தார்.

ெதாடர்ந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களையும், விமான சேதங்களையும் பார்வையிட்டார்.

.

மூலக்கதை