சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை உட்பட மாநகராட்சி பகுதிகளில் ரூ. 10 ஆயிரத்திற்கு குறைவான வருமானம் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுடன் கூடிய கொரோனா ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீதம் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி  வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதை தவிர்த்து ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 10,000 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 10ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோயில்களை திறக்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.



அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள்; அதாவது, 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவாலயங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10ம் தேதி  முதல் பொதுமக்கள் தரிசனம்  செய்ய அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும்.

மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற வேண்டும். இதைப்போன்று அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 10ம் தேதி முதல் செயல்படலாம்.


.

மூலக்கதை