கேரள விமான விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்...மத்தியமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு.!!!

தினகரன்  தினகரன்
கேரள விமான விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்...மத்தியமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு.!!!

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 7.40 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்தது. விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 2 பைலட் உட்பட 6 ஊழியர்கள்  என 190 பேர் இருந்தனர். அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. பைலட் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை தரையிறக்கினார். ஓடுபாதையில்  விமானம் நிற்க வேண்டிய நிலையில் வந்தபோது திடீர் என்று பைலட்டின் கட்டுப்பாட்டை  இழந்து முன்னோக்கி சென்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர், 35 அடி பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், விமானிகள் அறையில் இருந்து விமானத்தின் முன்பக்க வாசல் வரையிலான பகுதிவரை இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்கவில்லை. இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், விமானிகள் ராஜீவ், சர்புதீன் உட்பட 20 பயணிகள் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விமான விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்திற்கு சென்ற மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆய்வு மேற்கொண்டார்.இதன் தொடர்ச்சியாக விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று  மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

மூலக்கதை