பெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்தார் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்!

தினகரன்  தினகரன்
பெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்தார் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்!

பெய்ரூட்: பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் நிராகரித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருந்த 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென வெடித்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். சுமார் 5 ஆயிரம் பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 3 லட்சம் பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்துள்ளனர். பெய்ரூட் துறைமுகத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த வெடிவிபத்து உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லெபனான் நாட்டின் அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வந்தனர். அதுமட்டுமில்லாது, லெபனானுக்குப் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் மக்ரோன் சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையும் இதனை வலியுறுத்தியது. இந்நிலையில், விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் நிராகரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமைச்சகம் இது தொடர்பான விசாரணையை செவ்வாய்க்கிழமையே அறிவித்துவிட்டது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை, என்று கூறியுள்ளார். லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை