ஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி

தினகரன்  தினகரன்
ஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி

துபாயில் இருந்து வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 7.40 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்தது.  விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 2 பைலட் உட்பட 6 ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. பைலட் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை தரையிறக்கினார். ஓடுபாதையில்  விமானம் நிற்க வேண்டிய நிலையில் வந்தபோது திடீர் என்று பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர், 35 அடி பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், விமானிகள்  அறையில் இருந்து விமானத்தின் முன்பக்க வாசல் வரையிலான பகுதிவரை இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்கவில்லை. இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காயமடைந்த விமான பயணிகள் அலறி அழுதனர். உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள்  அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இது துரதிர்ஷ்டவசமானது.  127 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மற்றவர்கள் சிகிச்சை முடிந்து சென்று விட்டனர் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு 190 பயணிகளுடன் வந்த இந்த விமானத்தின் விமானி, ஓடுதள பாதையின் முடிவு பகுதி வரை ஓட்டி செல்ல முயற்சித்து இருக்க வேண்டும்.  பருவமழை பொழிவால் ஏற்பட்ட சறுக்கலான நிலையால், விமானம் ஓடுதள பாதையில் இருந்து விலகி சென்றுள்ளது. ஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும், என்று கூறியுள்ளார்.

மூலக்கதை