மழை நீரில் மிதக்கிறாள் மலைகளின் அரசி: மண் சரிவு, மரங்கள் சாய்ந்து கடும் பாதிப்பு

தினமலர்  தினமலர்
மழை நீரில் மிதக்கிறாள் மலைகளின் அரசி: மண் சரிவு, மரங்கள் சாய்ந்து கடும் பாதிப்பு

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், இடைவிடாத மழையால், கூடலுார், பந்தலுார் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன; மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, தேவாலாவில், 36 செ.மீ., கூடலுாரில், 35 செ.மீ., அவலாஞ்சியில், 34 செ.மீ., மழை பெய்துஉள்ளது.மாவட்டத்தின் பல பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன; ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று வரை, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், தேயிலை தொழிலாளர்கள் மற்றும் காய்கறி விவசாயிகள், பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் வெள்ளம்


கூடலுார் மைல் குடியிருப்பு பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில், மழை வெள்ளம் புகுந்தது. சளிவயல் பகுதியில், 12 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு, அருகி லுள்ள வீடுகளில் தங்க வைத்தனர்.பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு, கூடலுார் - ஊட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலையை சீரமைக்கும் பணிகளில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோல்டன் வியூ, புறமனவயல் உள்ளிட்ட பல பாலங்கள் சேதமடைந்த தால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக மின் தடை ஏற்பட்டதால், குடிநீர், மின்சாரம் இல்லாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.

மூழ்கிய தோட்டங்கள்


பந்தலுார், பொன்னானி, சோலாடி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகள், தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.பாலாவயல் பகுதியில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில், பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுதும், 1,500க்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

அவசர எண் 1077


நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹு கூறியதாவது:மாவட்டம் முழுதும், 25 முகாம்களில், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்கள் தங்க வைக்கப்பட்டு, தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.பலத்த காற்றுடன் மழை தொடர்வதால், ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்னெச்சரிக்கையாக முகாம்களில் தங்க வேண்டும்.ரெட் அலர்ட் முடியும் வரை, கிராம மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். சீரமைப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அவசர நேரங்களில், 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை