'மாஜி' நிதியமைச்சர் கைது

தினமலர்  தினமலர்
மாஜி நிதியமைச்சர் கைது

'மாஜி' நிதியமைச்சர் கைது

கோலாலம்பூர்: மலேஷிய முன்னாள் நிதியமைச்சர், லிம் குவான் இங், கோலாலம்பூரில் இருந்து, பினாங் தீவு வரை, கடலடி வழித்தடம் அமைக்கும் திட்டத்தில், 10 சதவீத கமிஷன் பெற்ற புகாரில் நேற்று கைது செய்யப்பட்டார்.இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள, லிம் குவான் இங், '' இது, புதிய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை,'' என, தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் - போம்பியோ பேச்சு

வாஷிங்டன்: மத்திய வெளியுறவு துறை அமைச்சர், ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ உடன் தொலைபேசியில் உரையாடினார்.அப்போது, இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தி, ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளில், பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து, இருவரும் பேச்சு நடத்தினர்.

வெள்ள சேதத்தை பார்வையிட்டார்

சியோல்: வட கொரியாவின் தெற்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால், ஏராளமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுாற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. உன்பா மாவட்டத்தில், 179 வீடுகள் சேதமடைந்துள்ளன.வெள்ள சேதத்தை பார்வையிட்ட வட கொரிய அதிபர், கிம் ஜங் உன், வீடிழந்தோருக்கு, 800 மாதிரி வீடுகளை கட்டவும், உணவுப் பொருட்கள் வழங்கவும் உத்தரவிட்டார்.

கடத்தலுக்கு சொகுசு சுரங்கம்

போனிக்ஸ்: அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், சன் லுாயிஸ் நகரில் இருந்து, அண்டை நாடான மெக்சிகோவுக்கு, கடத்தல்காரர்கள் சுரங்கம் அமைத்திருப்பது, சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.போதை மருந்துகளை கடத்த, 25 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தில், காற்று வசதிக்கான ஜன்னல்கள், குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள், போதை பொருட்களை கொண்டு செல்ல, சிறிய ரயில் பாதை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 'அமெரிக்கா, இதுபோன்ற வசதிகள் உள்ள சுரங்கத்தை கண்டதில்லை' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

வலைதள மோசடி அதிகரிப்பு

நியூயார்க்: கொரோனா பிரச்னையை பயன்படுத்தி, போலி வலைதளங்கள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறிப்பது, தகவல்களை திருடுவது ஆகியவை அதிகரித்துள்ளதாக, ஐ.நா., தெரிவித்து உள்ளது.இந்தாண்டு, ஜன., - மார்ச் வரை, போலி வலைதளங்களின் மோசடி குறித்த புகார்கள், 350 சதவீதம் அதிகரித்துள்ளன. இதனால், ஏராளமான மருத்துவமனைகள், சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.

அமெரிக்கா குற்றச்சாட்டு

நியூயார்க்: உலகிலேயே, பயங்கரவாதத்தை துாண்டும் நாடுகளில், ஈரான் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர், கெல்லி கிராப்ட் தெரிவித்துள்ளார்.ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு, ரஷ்யாவும், சீனாவும் ஆதரவளிக்க மறுத்தால், அவை, பயங்கரவாதத்திற்கு துணை போகும் நாடுகளாக கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிணை கைதிகள் விடுவிப்பு

பாரீஸ்: பிரான்சில், லீ ஹாவ்ர் நகரில் உள்ள வங்கியில் புகுந்த ஒரு இளைஞர், துப்பாக்கி முனையில், ஆறுபேரை பிணைய கைதிகளாக பிடித்துக் கொண்டார். அவரிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பேச்சு நடத்தினர்.முடிவில், அனைவரையும் விடுதலை செய்து, அந்த இளைஞர் சரணடைந்தார். அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்படுவதாக தெரிவித்த, போலீசார், மிரட்டலுக்கு பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கியாக இருக்கலாம் என, கூறினர்.

மூலக்கதை