கனமழையால் மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 85 தமிழர்கள் மண்ணில் புதைந்தனர்: இதுவரை 17 சடலங்கள் மீட்பு

தினகரன்  தினகரன்
கனமழையால் மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 85 தமிழர்கள் மண்ணில் புதைந்தனர்: இதுவரை 17 சடலங்கள் மீட்பு

* அனைவரும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்* இதுவரை 17 சடலங்கள் மீட்பு * அனைவரும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்திருவனந்தபுரம்: மூணாறு அருகே கனமழையால் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 85 பேர் மண்ணில் புதைந்தனர். அந்த இடத்தில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். கேரளாவில்   கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இடுக்கி   மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வருகிறது. இந்த மாவட்டம் பெரும்பாலும்   மலைப்பகுதி என்பதால், நேற்று முன்தினம் இரவு 5க்கும் மேற்பட்ட இடங்களில்  கடும்  நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான சாலைகளில் மண் மூடி, பாக்குவரத்து பாதித்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மூணாறில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள  ராஜமலை  பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கண்ணன் தேவன்  நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் இந்த நிலச்சரிவு  ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு அருகே தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் தமிழக தொழிலாளர்கள்தான் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு 4 வரிசையாக 20 வீடுகள் உள்ளன. இதில் 80க்கு மேற்பட்டோர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று பணி முடிந்து திரும்பிய தொழிலாளர்கள், வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர்.அப்போது, இரவு 11 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மேடான நிலையில் இருந்த ஒரு தேயிலை தோட்டம் முழுவதுமாக சரிந்து, தொழிலாளர்களின் வீடுகள் மீது விழுந்தது. இதில், 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. வீடுகளில் இருந்த அனைவரும் தூக்கத்திலேயே மண்ணில் புதைந்தனர். இரவு நேரம் என்பதால் இந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை 6 மணியளவில்தான் அருகில் உள்ளவர்கள் அப்பகுதிக்கு சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வனத்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகுதான் இந்த பயங்கர சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்தது. உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர்.தொடர்ந்து 3 நாட்களாக பெய்த தொடர் மழையாலும், ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாலும் சாலைகளில் வாகனம் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,  மூணாறு பெரியவரை பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த  பாலம் வழியாகத்தான் மண் சரிவு ஏற்பட்ட இடத்துக்கு செல்ல முடியும். இதனால்,  தற்காலிக பாலம் அமைத்து வாகனங்கள் மீட்பு பணிக்கு சென்றன. விபத்து நடந்து 10 மணி நேரத்திற்கு பின்னரே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடிந்தது. முதலில் உள்ளூர் பகுதியினரும், வனத்துறையினரும் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் மீட்பு பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. முதலில் 4 சடலங்களும், பின்னர், 13 சடலங்களும் மீட்கப்பட்டன. 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மூணாறில் உள்ள கண்ணன் தேவன் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கும் கொண்டு ெசல்லப்பட்டனர். மண்ணுக்கடியில் மேலும் 56 பேர் சிக்கி இருக்கலாம் என் கூறப்படுகிறது. இவர்கள் மண்ணில் புதைந்து பல மணி நேரமாகி விட்டதால், உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன், எஸ்பி கருப்புசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். போலீசார் தீயணைப்பு படையினர், வனத்துறையினர் அதிவேக  அதிரடிப்படையினர் மற்றும் ேதசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்தும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ  இடம் விரைந்தனர். சாலை வழியாக செல்ல சிரமம் ஏற்பட்டதால் விமானப்படை ஹெலிகாப்டர் உதவியை கேரள அரசு கோரியுள்ளது.55 பேர் கயத்தாறை சேர்ந்தவர்கள் நிலச்சரிவில் புதைந்துள்ள பன்னீர்செல்வம் என்பவரின் சகோதரர் சேகர் கூறுகையில், ‘‘விபத்து நடந்த பகுதியில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களை சேர்ந்த கோவிந்தாபுரம், பிள்ளையார்குளம், தலையால்நடந்தான்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களே வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் பெரும்பாலும் தமிழக தொழிலாளர்களே வசிக்கின்றனர். இந்த விபத்தில் எனது சகோதரர் பன்னீர் செல்வம் உட்பட, கயத்தாறு அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்த எங்கள் ஊரைச் சேர்ந்த 55க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி அறிந்தும் தமிழக அரசு தரப்பில் இதுவரை யாரும் எங்களை வந்து விசாரிக்கவில்லை. சடலங்களை மீட்டு எங்கள் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யவாவது அரசு எங்களுக்கு உதவ வேண்டும்,’’ என்றார்.மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில், ‘மூணாறு நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் சிக்கிய செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மண்ணுக்குள் சிக்கியுள்ள மீதியுள்ளோரை உயிருடன் மீட்பதற்கு போர்க்கால வேகத்தில் பணிகளை மேற்கொள்ளுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனை கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார். விபத்தில் இறந்தவர்கள்காந்திராஜ் (48), சிவகாமி (35), விஷால் (12), முருகன் (46), ராமலட்சுமி (40), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஷ்வரி (43), கவுசல்யா (25), தபசியம்மாள் (42), சிந்து (13), நிதீஷ் (25), பன்னீர் செல்வம் (50), கணேசன் (40).படுகாயம் அடைந்தவர்களில் சிலர்: பழனியம்மா (50), சீதாலட்சுமி (33), சரஸ்வதி (52), தீபன் (25)இருண்டு விட்டதால்மீட்பு பணி நிறுத்தம்நிலச்சரிவு நடந்துள்ள பகுதியில் மின்சார வசதி எதுவுமில்லை. மேலும், தொடர்ந்து மழை செய்து வருகிறது. அந்த பகுதியில் கும்மிருட்டு நிலவுகிறது. இதனால், மீட்புப்பணி நேற்று இரவு 7.30க்கு நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் மீட்டுப்பணி தொடரும் என்று அதிகாிகள் தெரிவித்தனர்.5 லட்சம் நிவாரணம்கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்த பேட்டியில், ‘‘மண்சரிவில் சிக்கி 15 பேர் இறந்துள்ளனர். இரவில் இந்த சம்பவம்  நடந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில்  மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் , நிலச்சரிவு ஏற்பட்டது குறித்த தகவல் வெளியே தெரிய பல மணி நேரமானது. மீட்புப் பணி துவங்கி இருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹ 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.  காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்,’’ என்றார். பிரதமர் இரங்கல்மண் சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மண் சரிவில் ஏராளமானோர் பலியானது வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை