கோழிக்கோட்டில் 190 பயணிகளுடன் 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்த விமானம்: பைலட் உட்பட 14 பேர் பலி

தினகரன்  தினகரன்
கோழிக்கோட்டில் 190 பயணிகளுடன் 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்த விமானம்: பைலட் உட்பட 14 பேர் பலி

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து வந்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 7.40 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்தது. விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 2 பைலட் உட்பட 6 ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். அப்போது, பலத்த மழை பெய்து ெகாண்டிருந்தது. பைலட் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை தரையிறக்கினார். ஓடுபாதையில் விமானம் நிற்க வேண்டிய நிலையில் வந்தபோது திடீர் என்று பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர், 35 அடி பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், விமானிகள் அறையில் இருந்து விமானத்தின் முன்பக்க வாசல் வரையிலான பகுதிவரை இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்கவில்லை. இதனால், ெபரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காயமடைந்த விமான பயணிகள் அலறி அழுதனர். உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விமானி மற்றும் ராஜீவ், சர்புதீன் உட்பட 14 பயணிகள் இறந்தனர். கனமழைதான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கோழிக்கோடு, மலப்புரம் உட்பட  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து ெசன்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துமனைகளுக்கு கொண்டு சென்றன. தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் சாம்பசிவ ராவ் மீட்பு பணிகளுக்கு தலைமை வகித்து வருகிறார். விமானத்தின் முன் பகுதியில் இருந்த பயணிகள்தான் அதிகம் காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.இந்த விமான நிலையம் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. இது, ‘டேபிள் டாப்’ விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல், மங்களூரு விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் பலர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை