தணிக்கைக்கு இணங்காவிட்டால் நீக்கம் சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா நெருக்கடி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்; அமெரிக்க பங்குச் சந்தைகளில் அங்கம் வகிக்கும் சீன நிறுவனங்கள், அந்நாட்டின் தணிக்கை முறைக்கு ஒத்து வராவிட்டால், அந்நிறுவனங்களை பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்க, அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

'கொரோனா' வைரஸ் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காமல் மறைத்ததால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சீனா மீது, அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே, மோதல் அதிகரித்துள்ளது.சமீபத்தில், சீனாவை தண்டிக்கும் வகையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் இயங்கி வந்த சீன துாதரகத்தை மூடி, அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், சீனாவுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கைக்கு, அமெரிக்கா தயாராகியுள்ளது. அதன்படி, அமெரிக்க பங்குச் சந்தைகளில், இடம் பெற்றுள்ள சீன நிறுவனங்களுக்கு, நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:அமெரிக்காவின், 'நியூயார்க் மற்றும் நாஸ்டாக்' உள்ளிட்ட பங்குச் சந்தைகளில், அங்கம் வகிக்கும் சீன நிறுவனங்கள், தங்களை பொதுத் துறை நிறுவனங்களாக அறிவித்துக் கொள்ளாமல், தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றன.அந்நிறுவனங்கள், அமெரிக்க தணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது அவசியம். தவறினால், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து, அவற்றை நீக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த மே மாதம், தணிக்கை உள்ளிட்ட சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றாத சீன நிறுவனங்களை, பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கும் மசோதா, செனட் சபையில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

'டிக் டாக், வி சாட்'செயலிகளுக்கு தடைஇந்தியாவில், கடந்த ஜூன் மாதம், 'டிக் டாக்' உள்ளிட்ட, 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, எம்.பி.,க்கள் என பலரும், அமெரிக்காவிலும் டிக் டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என, அதிபரை வலியுறுத்தினர்.

இதற்கிடையே, டிக் டாக் நிறுவனத்தை, 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் கையகப்படுத்தும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டிக் டாக், 'வி சாட்' உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில், அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இந்த தடை உத்தரவு, 45 நாட்களில்அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை