நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும்

தினமலர்  தினமலர்
நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும்

புதுடில்லி:மின்னணு உற்பத்தி ஆண்டுக்கு, 30 சதவீதம் அளவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சி காணும் என, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் அஜய் பிரகாஷ் சாவ்னி தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு, மின்னணு உற்பத்தி ஆண்டுக்கு, 30 சதவீதம் எனும் அளவில் வளர்ச்சி காணும் என, அரசு எதிர்பார்க்கிறது. மேலும், இக்காலகட்டத்தில் கூடுதலாக, 11.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியை எட்டும் என கருதப்படுகிறது.மின்னணு பொருட்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை, ஆண்டுக்கு, 40 – 50 சதவீதம் அளவுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சி காணும்.

இந்தியாவில் மின்னணு உற்பத்தி, மிகவும் கணிசமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 23 சதவீத, ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதத்தை, இத்துறை பதிவு செய்துள்ளது. நாட்டின் மொபைல் போன் உற்பத்தியை பொறுத்தவரை, ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஆறு கோடி போன்களாக இருந்தது; தற்போது, 33 கோடியாக அதிகரித்துள்ளது.


உள்நாட்டு உற்பத்தி

மேலும், நாட்டின், 90 சதவீத மொபைல் போன் தேவைகள், உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.கிட்டத்தட்ட, 22 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை தயாரித்து வழங்க முன்வந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை