பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020

தினமலர்  தினமலர்
பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020

மான்செஸ்டர்: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 219 ரன்னுக்கு சுருண்டது. பொறுப்பாக ஆடிய போப் அரைசதமடித்து ஆறுதல் தந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 326 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 92 ரன் எடுத்திருந்தது. போப் (46), பட்லர் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்தின் போப், டெஸ்ட் அரங்கில் தனது 5வது அரைசதமடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது நசீம் ஷா பந்தில் போப் (62) அவுட்டானார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜாஸ் பட்லர் (38), யாசிர் ஷா ‘சுழலில்’ போல்டானார். தொடர்ந்து அசத்திய இவரது பந்தில் டாம் பெஸ் (1), கிறிஸ் வோக்ஸ் (19) அவுட்டாகினர்.

அடுத்து வந்த ஸ்டூவர்ட் பிராட், ஷஹீன் அப்ரிதி வீசிய 63வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். ஷதாப் கான் ‘சுழலில்’ ஆர்ச்சர் (16), ஜேம்ஸ் ஆண்டர்சன் (7) சிக்கினர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 219 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பிராட் (29) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 4, முகமது அபாஸ், ஷதாப் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பாக்., முன்னிலை: பின் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூது (0) ஏமாற்றினார். அபித் அலி (20) நிலைக்கவில்லை. வோக்ஸ் பந்தில் பாபர் ஆசம் (5), கேப்டன் அசார் அலி (18) அவுட்டாகினர். ஆசாத் ஷபிக் (29) ‘ரன்–அவுட்’ ஆனார்.

தேநீர் இடைவேளைக்கு பின், இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து, 208 ரன்கள் முன்னிலையில் இருந்தது. முகமது ரிஸ்வான் (22) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை