பேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020

தினமலர்  தினமலர்
பேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020

ராஞ்சி: ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகும் வகையில் ராஞ்சியில் தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்திய அணி ‘சீனியர்’ விக்கெட் கீப்பர் தோனி 38. கடந்த 2019 உலக கோப்பை அரையிறுதிக்குப் பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. 13 வது ஐ.பி.எல்., தொடருக்காக சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

கொரோனா பரவல் வேகமெடுக்க, தொடர் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) செப். 19 முதல் நவ. 10 வரை ஐ.பி.எல்., தொடர் நடக்கவுள்ளது. எட்டு அணி நிர்வாகமும் தங்களது வீரர்களை தனிமைப்படுத்தும் பணிகளை துவக்கியுள்ளன.

தோனி தலைமையிலான வீரர்கள் அனைவரும் ஆக. 19ல் சென்னை வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த வாரம் ராஞ்சியில் தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க அலுவலக பணியாளர் ஒருவர் கூறுகையில்,‘‘தோனி கடந்த வார இறுதியில் எங்கள் மைதானத்துக்கு வந்தார். இங்கு பவுலிங் மெஷின் உதவியுடன், இரண்டு நாட்கள் உள்ளரங்கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதன் பின் தோனி வரவில்லை. மீண்டும் வருவாரா, இல்லையா அல்லது அவர் என்ன திட்டம் வைத்துள்ளார் என உண்மையில் தெரியவில்லை,’’ என்றார்.

 

சிக்கலில் ‘டாடி ஆர்மி’

ஐ.பி.எல்., பாதுகாப்பு திட்டத்தின் படி, பயிற்சி, போட்டிகளின் போது வீரர்களை குடும்பத்தினர் உட்பட யாரும் நெருங்கக் கூடாது. மூத்த வீரர்களாக இருப்பதால் ‘டாடி ஆர்மி’ என்றழைக்கப்படும் சென்னை அணி வீரர்கள் தனியாகத் தான் யு.ஏ.இ., செல்வர் எனத் தெரிகிறது. தொடரின் பாதியில் குடும்பத்தினர் இணையலாம்.

மூலக்கதை