தனியார் நிறுவனத்தை உடைத்து 1.5 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

தினகரன்  தினகரன்
தனியார் நிறுவனத்தை உடைத்து 1.5 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

அம்பத்தூர்: சென்னை அடுத்த நொளம்பூர், எஸ்பி கார்டன், 7வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (43). அம்பத்தூர் அடுத்த பாடி- முகப்பேர் சாலையில் டூல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆனந்தன், வேலை முடிந்ததும், வீட்டுக்கு சென்றார். பின்னர், ஊழியர்கள் கம்பெனியை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை ஊழியர்கள் கம்பெனியை திறக்க வந்தனர். அப்போது, முன்பக்க இரும்பு ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, ஆனந்தனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர், கம்பெனிக்கு சென்றார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள லாக்கரில் வைத்திருநத் 1.5 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.இதுகுறித்து ஆனந்தன், கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொற்கொடி சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கம்பெனியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சி, சன்  சிட்டி நகரில்,  அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார், நேற்று முன்தினம் இரவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு, 10 மூட்டைகள், 10 அட்டை பெட்டிகளில் குட்கா பொருட்கள் இருந்தது. இதனை, நல்லூர் ஊராட்சி சோலையம்மன் நகர் 20வது தெருவை முனியசாமி (59) என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அங்கிருந்த ₹5 லட்ச மதிப்புள்ள 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, சோழவரம் போலீசில் ஒப்படைத்தனர். சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 2 நாட்கள் முன் நல்லூர் ஆட்டந்தாங்கல் பகுதியில் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை நேரு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (43). தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் அபிநயா (16). 10ம் வகுப்பு படித்துள்ளார். மகன் கிருஷ்ணன் (5). இந்நிலையில் தங்கராஜ், தனது மகன், மகளுடன் ஒரே மொபெட்டில் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர். நசரத்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அபிநயா சம்பவ இடத்திலேயே இறந்தார். தலையில் காயமடைந்த தந்தை தங்கராஜ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார். கிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். புகாரின்படி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் ஏழுமலை (60) என்பவரை கைது செய்தனர்.ஆவடி: ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு, 16 வயதில் மகள் உள்ளார். சிறுமி, ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறாள். இந்நிலையில், கடந்த 4ம் தேதி தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது, சிறிமி வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில்,  கொள்ளுமேடு, செங்குன்றம் சாலையில்  வசிக்கும் ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (45) என்பவர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சீனிவாசனை நேற்று மாலை கைது செய்தார்.

மூலக்கதை