மீண்டும் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே

தினமலர்  தினமலர்
மீண்டும் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே

கொழும்பு: இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், ராஜபக்சே குடும்பத்தினரின் இலங்கை மக்கள் கட்சி, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்த அபார வெற்றி வாயிலாக, அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் அரசியல் அமைப்பு சட்டப் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை திருத்துவதற்கான வாய்ப்பு, ராஜபக்சே கட்சிக்கு கிடைத்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் இளைய சகோதரர் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தன் சகோதரர் மகிந்தா ராஜபக்சேவை, பிரதமராக நியமித்த கோத்தபயா, பார்லிமென்ட் தேர்தலை முன் கூட்டியே நடத்த திட்டமிட்டார். ராஜபக்சே குடும்பத்தினரின் கட்சியான, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா எனப்படும் இலங்கை மக்கள் கட்சிக்கு பார்லிமென்டில் பெரும்பான்மை இல்லை. தள்ளிவைப்புஇதனால், அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தில், அவர்களால் திருத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, கடந்த மார்ச்சில், பார்லிமென்டை கலைத்த கோத்தபயா, முன் கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்தார். முதலில், ஏப்ரலில் தேர்தல் நடப்பதாக இருந்தது; பின், ஜூலையில் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்னை உச்சத்தில் இருந்ததால், ஆக., 5க்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள், சுகாதார வசதிகளுடன், சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் தெற்கு பகுதி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சியே முன்னிலையில் இருந்தது.இலங்கை பார்லிமென்டில், மொத்தம் உள்ள, 225 உறுப்பினர்களின், 196 பேர் மட்டுமே நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மீதமுள்ளவர்கள், தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இந்நிலையில், இலங்கை மக்கள் கட்சி, 145 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக, இலங்கை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை, அந்த கட்சிக்கு கிடைத்துள்ளது.இதன் வாயிலாக, அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் அரசியல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் திருத்தம் செய்ய, அந்த கட்சிக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. மகிந்த ராஜபக்சே, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

அடுத்த சில நாட்களில், பார்லிமென்ட் ஒப்புதலுடன், அதிபருக்கான அதிகார வரம்பை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளில், இலங்கை மக்கள் கட்சி முழு வீச்சில் செயல்படவுள்ளது.இந்த தேர்தலில், இலங்கை மக்கள் கட்சியின் கூட்டணி கட்சிகள், ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி, 60 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தம் உள்ள, 22 மாவட்டங்களில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஐக்கிய தேசிய கட்சி, ஓட்டு விகிதாச்சார அடிப்படையில் ஒரு உறுப்பினரை மட்டும் பெற்றுள்ளது. செல்வாக்குரணில் விக்கிரமசிங்கே, நான்கு முறை பிரதமராக பதவி வகித்தவர். கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில், ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்வாக்கு உள்ளது.

ஆனாலும், இந்த தேர்தலில், கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி, நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஒட்டு மொத்த பட்டியலில், 2 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்ற இந்த கட்சி, பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து, சமகி ஜன பாலவெகாயா என்ற புதிய கட்சியை துவக்கிய, சஜித் பிரேமதாசாவுக்கு, இந்த தேர்தலில் கணிசமான ஆதரவு கிடைத்துள்ளது. 55 இடங்களில் வெற்றி பெற்ற இந்த கட்சி, பெரும்பாலான இடங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது.முஸ்லிம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்தக் கட்சி, திரிகோணமலையில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ஒட்டு மொத்தமாக, இந்த கட்சி, 23 சதவீத ஓட்டுகளை பெற்றது.தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செல்வாக்கு பெற்ற கட்சியான, தமிழ் தேசிய கூட்டணி, இந்த தேர்தலில் பெரிதாக சாதிக்கவில்லை.

கடந்த தேர்தலில், 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்த கட்சி, தற்போது, 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா, மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஓட்டு சதவீத அடிப்படையில், இந்த கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.பிரதமர் வாழ்த்து!இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'அனைத்து துறைகளிலும் இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்தவும், இணைந்து செயல்படவும், இந்த தேர்தல் வெற்றி வழி வகுத்துள்ளது. இந்திய - இலங்கை நாடுகளின் நட்பு, புதிய உச்சத்துக்கு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது' என, பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வாழ்த்துக்கு, மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை