காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கேஆர்எஸ், கபினியில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு

தினகரன்  தினகரன்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கேஆர்எஸ், கபினியில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு:  கர்நாடக  மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒருவாரமாக கன மழை  பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  கபினி, ஹாரங்கி அணைகள் நிரம்பியுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ்.  அணையில் நேற்று மாலை நிலவரப்படி 116.30 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு  வினாடிக்கு 55,563 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து  வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நிரம்ப இன்னும் 9  அடி மட்டுமே பாக்கியுள்ளது.கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து  வருவதால், எந்த நேரத்திலும் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் முதல் 50  ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கும் வாய்ப்புள்ளதால், நதியோரங்களில்  வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கே.ஆர்.எஸ். அணை  நீர்ப்பாசன துறை முதன்மை பொறியாளர் அறிவித்துள்ளார். அனேகமாக இன்று முதல்  50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.கடல்  மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணை முழுமையாக  நிரம்பியது. ேநற்று மாலை நிலவரப்படி 2,280.20 அடி உயரத்திற்கு தண்ணீர்  இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 80,000 கனஅடியும், வெளியேற்றம் வினாடிக்கு  79,000 கனஅடியாகவும் இருந்தது. கபினி அணையில் இருந்து திறந்துள்ள தண்ணீர்  காரணமாக கபிலா நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும்  கபினி அணைகளில் இருந்து ஏறக்குறைய வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர்  நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன துறை வட்டாரம் மூலம்  தெரியவருகிறது.

மூலக்கதை