இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை: உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

தினகரன்  தினகரன்
இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை: உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் ஆப்பை தடை செய்வதற்கான உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். லடாக்கின் கல்வான் மோதலைத் தொடர்ந்து, சீனாவின் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 106 மொபைல் ஆப்கள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் சமீபத்தில் தடை செய்யப்பட்டது. இதனை அமெரிக்கா வெகுவாக பாராட்டி வரவேற்றது. அதேசமயம், அமெரிக்காவில் டிக் டாக் ஆப்புக்கு தடை விதிக்க இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி வந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் ஆகிய சீன மொபைல் ஆப்களுக்கு தடை விதித்து, அதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த உத்தரவு 45 நாட்களில் அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு அமலுக்கு வந்ததும், அமெரிக்காவில் எந்த நிறுவனமும் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்சுடன் எந்தவிதமான பரிவர்த்தனையும் செய்ய முடியாது.தடை குறித்து டிரம்ப் கூறுகையில்,‘‘சீன மொபைல் ஆப்கள் தேச பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் ஆப்பும், டென்சென்ட் ஹோல்டிங் நிறுவனத்தின் வீசாட் ஆப்பும், அதை பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக் கொள்கிறது. இதன் மூலம், அமெரிக்க மக்களின், அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவற்றை சீன கம்யூனிஸ்ட் அரசு அறிய முடியும். அவர்களின் நடமாட்டதை கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும். இந்த அச்சுறுத்தலால் டிக்டாக், வீசாட் ஆப்களுக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறேன்,’’ என்றார்.இந்தியா செல்ல வேண்டாம்கொரோனா பரவலைத் தொடர்ந்து, அமெரிக்கா விதித்த பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் 50 வெளிநாடுகளுக்கான பயண தடை மட்டும் இன்னும் நீடிக்கிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால் இந்தியா செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது.

மூலக்கதை