மூன்று நாட்கள் எல்லாம் தேவையில்லை ஒரே ஒரு நிமிடம்தான்: கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள்

தினகரன்  தினகரன்
மூன்று நாட்கள் எல்லாம் தேவையில்லை ஒரே ஒரு நிமிடம்தான்: கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள்

துபாய்: மனித உடலில் ஏற்படும் வியர்வையின் வாசனை மூலமாக ஒருவருக்கு கொரோனா  நோய் தொற்று உள்ளதா என்பதை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள், உலகில் முதன் முதலாக துபாய்  விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த விமான சேவைகள், கடந்த சில நாட்களாக சில நாடுகளில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த விமான பயணத்துக்கு முன்பாக, பயணிகளுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில், அறிகுறிகளுடன் இருப்பவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டாலும், அதன் முடிவுகள் தெரிய 3 நாட்கள் வரை ஆகின்றன. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிலையத்தில் மனிதர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா? என கண்டறியும் பணியில் முதன் முதலாக மோப்ப  நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மோப்ப நாய்களால் வைரசை கண்டுபிடிக்க முடியுமா?  முடியாதா? என விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. புற்றுநோய், காசநோய்,  மலேரியா, நீரிழிவு நோய் உள்ளிட்ட குறிப்பிட்ட நோய் தொற்று உள்ளவர்களை மோப்ப  நாய்கள் கண்டுபிடிப்பதாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனாவை அவற்றால் கண்டுபிடிக்க முடியுமா? என்ற சந்தேகம் நிலவியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறையில் பணியாற்றும் கே-9 மோப்ப  நாய்கள், இதையும் கண்டுபிடித்து அசத்துகின்றன. அது, எப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம்.1  விமான நிலையத்தில் இந்த மோப்ப நாய் படை, கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற பாதுகாப்பான தனியறையில் நிறுத்தப்பட்டுள்ளன. 2  விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின்  அக்குள் பகுதியில் இருந்து  வியர்வை  மாதிரி சேகரிக்கப்படுகிறது. 3 சோதனையை உறுதி செய்வதற்கு, பயணிகளின் சளி மாதிரியும் எடுத்து குடுவையில் சேகரிக்கப்படுகிறது.4 அறையில் இருக்கும்  மோப்ப நாய்களின் முன்பாக இவை வைக்கப்படுகின்றன. 5 அவற்றை மோப்பம் பிடிக்கும் நாய்கள், தொற்று இருப்பவர்களின் மாதிரிகளை போலீசாருக்கு துல்லியமாக அடையாளம் காட்டுகின்றன.6 இதை கண்டுபிடிக்க இந்த நாய்கள் எடுத்துக் கொள்ளும் மொத்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே.7 பிறகு, சம்பந்தப்பட்ட பயணிகள் மட்டுமே தனியாக பிரிக்கப்பட்டு, தகுந்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.8 கொரோனா நோயாளிகளை மோப்ப நாய்கள் கண்டுபிடிப்பதில் 92 சதவீதம் வெற்றி பெறுகின்றன. இது குறித்து துபாய் காவல்துறையை சேர்ந்த மேஜர் சலா  அல் மஸ்ரூய் கூறுகையில், “ விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் மாதிரிகளை சேகரிக்க, சுகாதார துறை ஊழியர்கள் உதவுகின்றனர். தொற்று இருப்பவர்களை ஒரே நிமிடத்தில் நாய்கள் கண்டுபிடிப்பதால், விமான பயணத்திலும் தாமதம் ஏற்படுவது இல்லை,’’ என்றார்.பயிற்சி அளித்தது எப்படி* கே-9 மோப்ப நாய்களுக்கு முதலில், கொரோனா வைரஸ் தொற்றியுள்ள பொருட்களை மோப்பம் பிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், அவை வெற்றி பெற்றன.* பிறகு, இந்த வைரசால் பாதிக்கப்பட்ட மனிதர்களையும் கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. * கொரோனா மருத்துவ மையங்களுக்கு அவை அழைத்துச் செல்லப்பட்டன. அங்கு பரிசோதனைக்கு வந்தவர்களில், கொரோனா பாதித்தவர்களை மட்டுமே கே-9 மோப்ப நாய்கள் சுற்றிவளைத்தன. * நாய்களுக்கு இந்த பயிற்சியை அளிக்க, கொரோனா பாதித்தவர்களின் சளி, உடல் வியர்வை வாசனை போன்றவை பயன்படுத்தப்பட்டன.25 கோடி உணரும் செல்கள்ஐக்கிய அரபு எமிரேட்சின் பாதுகாப்பு, குற்ற புலனாய்வு துறையில் கே-9 மோப்ப நாய் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படை பிரிவில் ஜெர்மன் செப்பர்டு, மலினோய்ஸ் போன்ற நாய்கள் அதிகளவில் இடம் பெறுகின்றன. இந்த வகை மோப்ப நாய்களுக்கு மூக்கில், மோப்பம் பிடிப்பதற்கான  25 கோடி உணரும் செல்கள் உள்ளன.

மூலக்கதை