85,000க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டில் ரூ.1,400 கோடி கோரி விண்ணப்பம்

தினகரன்  தினகரன்
85,000க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டில் ரூ.1,400 கோடி கோரி விண்ணப்பம்

புதுடெல்லி: காப்பீட்டில் கொரோனா சிகிச்சை செலவுகளை கோருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 85,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் ரூ.1,400 கோடி கோரப்பட்டுள்ளது என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், படுக்கை எண்ணிக்கையை அரசுகள் அதிகரித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, வசதி படைத்தவர்கள், காப்பீடு செய்தவர்கள் பலர் தனியார் மருத்துவமனைகளில் சேருகின்றனர். அங்கு சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சேர்ந்தவர்கள், சிகிச்சை செலவு கோரி காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், கொரோனா சிகிச்சைக்காக இதுவரை சுமார் 85,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றின் மொத்த சிகிச்சை செலவு கோரிக்கை ரூ.1,400 கோடி. பொது காப்பீட்டு கவுன்சில் புள்ளி விவரப்படி மேற்கண்ட தகவகல்கள் தெரிய வந்துள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,000 விண்ணப்பம் வருவதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:கொரோனா சிகிச்சைக்காக பலர் தனியார் மருத்துவமனைகளில் சேர துவங்கியுள்ளனர். உதாரணமாக பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில்தான் அனைவரும் சிகிச்சை பெற்றனர். ஆனால், சமீபகாலமாக தனியார் மருத்துவனைகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் இங்கு சுமார் 5,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவால் விண்ணப்பங்கள் அதிகம் குவிந்தாலும், இந்தியாவின் ரூ.51,000 கோடி மதிப்பிலான காப்பீட்டு சந்தையில் இது குறைவு என்றே கூற வேண்டும்  என்றனர்.

மூலக்கதை