ஷாமி ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசருக்கு மத்திய அரசு தடை

தினகரன்  தினகரன்
ஷாமி ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசருக்கு மத்திய அரசு தடை

புதுடெல்லி: ஷாமி ஸ்மார்ட்போனில் உள்ள இன்டர்நெட் பிரவுசருக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. லடாக் எல்லை பிரச்னையை தொடர்ந்து, சீனாவுக்கு எதிராக பொருளாதார இழப்பு ஏற்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. முதல் கட்டமாக 59 ஆப்ஸ்கள் தடை செய்யப்பட்டன. பின்னர் மீண்டும் சில ஆப்ஸ்களை தடை செய்துள்ளது. இத்தனைக்கும் நடுவில் சில சீன ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இருப்பினும், சீன தயாரிப்பு அல்லாத ஸ்மார்ட் போன்களுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. மலிவு விலையில் அதிக திறன், வசதியுள்ள ஸ்மார்ட்போன்களை தயாரித்ததால்தான், சீன போன்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் இருந்தது. முதன்முதலாக ஷாமி நிறுவனம்தான் குறைந்த விலையில் அதிக திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் சந்தைப்படுத்தியது. இதுவரை இந்த நிறுவனம் 10 கோடிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்றுள்ளது. ஏராளமானோர் இந்த நிறுவன ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஷாமி இணைய பிரவுசருக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக, மி கம்யூனிட்டி ஆப்சையும் மத்திய அரசு தடை செய்தது. இதனால், மொபைல் போன் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையில், இந்தியாவில் உள்ள தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான விதிகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதாக கூறியுள்ள ஷாமி நிறுவனம், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி சிக்கல்களை தீர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை