போட்டி தள்ளிப்போனதால் ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்

தினகரன்  தினகரன்
போட்டி தள்ளிப்போனதால் ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்

டோக்கியோ: ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அங்கு கடலில் மிகப்பெரிய அளவில் நிறுவப்பட்டிருந்த 5 வண்ண பிரமாண்ட ஒலிம்பிக் வளையங்கள் நேற்று திடீரென அகற்றப்பட்டன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோடைகால ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதமும், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் மாதமும் தொடங்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஒசி) அறிவித்துள்ளது. அதனால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்காக செய்யப்பட்டு வந்த ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன. வீரர்களை, ரசிகர்களை ஈர்க்க, வரவேற்க செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள், பிரமாண்டமான வளைவுகள் அப்படியே விடப்பட்டு இருந்தன. போட்டிகள் நடைபெற இருந்த அரங்கங்கள் இப்போது பொலிவிழந்து காணப்படுகின்றன. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான திட்டமிடல் பணியில் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்தும் முயற்சியாக  ஒடைபா மெரைன் பூங்காவில் பிரமாண்டமான 5 வண்ண ஒலிம்பிக் வளையங்கள் மிதக்க விடப்பட்டு இருந்தது. அந்த வளையங்கள் நேற்று காலை திடீரென அகற்றப்பட்டன. இழுவை படகு மூலம் அங்கிருந்து கப்பல் பராமரிப்பு பகுதிக்கு ஒலிம்பிக் வளையங்கள் நிறுவப்பட்ட மிதவை கொண்டு செல்லப்பட்டது.  இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி செய்தி தொடர்பாளர் மாசா டகயா, \'கடலில் நிறுவப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்கள் தற்காலிகமாகவே அகற்றப்பட்டுள்ளது. அது மீண்டும் அங்கு நிறுவப்படும்\' என்றார். ஒலிம்பிக் ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள அடுஷி யனஷிம்சூ, ‘பராமரிப்பு பணிகளுக்காக தான் ஒலிம்பிக் வளையங்கள் கடலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் முடிய இன்னும் 4 மாதங்கள் ஆகும். அதன்பிறகு மீண்டும் ஒலிம்பிக் வளைங்கள் அதே இடத்தில் வைக்கப்படும்’ என்று என்று தெரிவித்தார்.ஒலிம்பிக் போட்டி ஓர் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை போட்டி நெருங்கும் நேரத்தில் செய்ய டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பு அங்கு நிறுவப்பட்டிருந்த அலங்கார ஏற்பாடுகள் வெயிலிலும் மழையிலும் இப்போதே களையிழந்து காணப்படுகின்றன. அவற்றை இன்னும் ஓராண்டுக்கு அப்படியே விட்டால் பொலிவை முழுமையாக இழந்துவிடும் என்பதால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் ஒலிம்பிக் போட்டிக்காக்க செய்யப்பட்டுள்ள பிற ஏற்பாடுகள், அலங்காரங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவை நிறுவப்படும்.

மூலக்கதை