ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை தங்கம் அடமானத்தில் கூடுதல் கடன் கிடைக்கும்

தினமலர்  தினமலர்
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை தங்கம் அடமானத்தில் கூடுதல் கடன் கிடைக்கும்

மும்பை:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
* முதலாவதாக, ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல், தற்போதிருக்கும் அதே நிலையை தொடர இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் தற்போது இருக்கும் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகியவற்றுக்கான வட்டியிலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை

* அடுத்து, தங்கநகை அடமான கடனில், தங்கத்தின் மதிப்பில், 90 சதவீதம் அளவுக்கு கடன் வழங்க அனுமதி வழங்கி உள்ளது. தற்போது, 75 சதவீதம் அளவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் குடும்பங்கள், சிறுவணிகர்கள், தொழில்முனைவோர் ஓரளவு பயன் பெறுவர்

* பணவீக்கம், 6 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும், தற்போது இருக்கும், 4 சதவீத வட்டி என்ற நிலையையே தொடர இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

* கொரோனா தொற்று பரவலால், பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டு, தேவை ஏற்படுமானால், வரும் காலத்தில், மேலும் வட்டி குறைப்புகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை, 1.15 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை அறிவித்து உள்ளது


* மேலும் வங்கிகளின் டிபாசிட்டுகளுக்காக, ரிசர்வ் வங்கி வழங்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கும், 3.35 சதவீதம் என்ற நிலையே தொடரும் என்றும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

* நெருக்கடியில் சிக்கியிருக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தங்கள் கடனை மறுசீரமைத்துக் கொள்ளலாம் கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, கார்ப்பரேட், தனிநபர் ஆகியோருக்கான கடன்களை மறுசீரமைக்க, நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது

* முன்னுரிமை கடன் துறைகள் பட்டியலில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் சேர்க்கப்படும்

* டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பிரச்னைகளை தீர்க்க வசதியாக, ஆன்லைன் மூலமான வழிவகை ஏற்படுத்தப்படும் வீட்டு வசதி துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், தேசிய வீட்டு வசதி வங்கிக்கு, 5,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி வசதி வழங்கப்படும்

* வேளாண் துறைக்கு உதவும் வகையில், நபார்டு வங்கிக்கு, 5,000 கோடி ரூபாய் நிதி வசதி வழங்கப்படும்

* ரிசர்வ் வங்கி, ‘புதுமை மையம்’ ஒன்றை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. புதிய திறன்களை மேம்படுத்துவதற்கும், நிதி சேர்க்கையை அதிகரிக்கவும், வங்கி சேவைகளை மேம்படுத்துவதற்கும் இந்த, புதுமை மையம் உதவிகரமாக இருக்கும்

* டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் வகையில், இணைய வசதி இல்லாமலே, கார்டுகள் மற்றும் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி, பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வட்டி விகிதம் குறித்த அறிவிப்புக்கு பிறகு, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இரண்டாவது காலாண்டில், நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் நிலைமை சீரடையும்.கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், உலக அளவிலான பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து, மீட்சி பெறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் பாதிக்கப்பட்டு விட்டன.

கரீப் பருவ பயிர் அறுவடை நன்றாக இருக்கும் என்பதால், கிராமப்புற தேவைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.பொருளாதார நடவடிக்கைகளில் மீட்சி துவங்கி விட்டாலும், தொற்று நோய் அதிகரிப்பால், ஊரடங்குகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, நாடு தள்ளப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தங்க நகைக் கடன்

விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்காக வழங்கப்படும் தங்க நகைக் கடன்களுக்கான, அனுமதிக்கப்பட்ட கடன் மதிப்பு விகிதத்தை, ரிசர்வ் வங்கி, 75 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.கொரோனா பரவலால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்புகளை, குடும்பங்கள், தொழில்முனைவோர், சிறுவணிகர்கள் ஆகியோர் சமாளிக்க உதவும் வகையில், தங்க நகைகள் மீதான கடனில், இத்தகைய சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், தேவையான அனைத்திலும் நாங்கள் விழிப்புடன் இருப்போம். தைரியமும், உறுதியும் கொரோனாவை வெல்லும்

சக்திகாந்த தாஸ்

கவர்னர், ரிசர்வ் வங்கி

மூலக்கதை