கோஹ்லியுடன் கூட்டணி: ஆரோன் பின்ச் ஆர்வம் | ஆகஸ்ட் 06, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லியுடன் கூட்டணி: ஆரோன் பின்ச் ஆர்வம் | ஆகஸ்ட் 06, 2020

மெல்போர்ன்: ‘‘கோஹ்லி தலைமையில் ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட காத்திருக்கிறேன்,’’ என, ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஆரோன் பின்ச் 33. இவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் செப். 19ல் துவங்கவுள்ள 13வது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் கோஹ்லியின் பெங்களூரு அணியில் ஒப்பந்தமானார். இம்முறை பெங்களூரு அணியில் டிவிலியர்ஸ், பின்ச், கிறிஸ் மோரிஸ், ஸ்டைன், இசுரு உதானா போன்ற உலகின் முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பின்ச் கூறியது: 

பெங்களூரு அணியில் இணைய நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது. கோஹ்லி, டிவிலியர்ஸ், ஸ்டைன் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களுடன் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விராத் கோஹ்லி தலைமையில் பங்கேற்க இருப்பது சுவாரஸ்யமானது. 

இவருக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளேன். முதன்முறையாக இவருடன் இணைந்து விளையாட இருப்பது சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியில் இவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அணியின் வெற்றிக்கு போராடுவேன்.

இவ்வாறு பின்ச் கூறினார்.

மூலக்கதை