பெய்ரூட் குண்டுவெடிப்பு; நேரில் பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் ஆறுதல்

தினமலர்  தினமலர்
பெய்ரூட் குண்டுவெடிப்பு; நேரில் பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் ஆறுதல்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 9.30 மணி அளவில் பயங்கரமான குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

முதலில் இது ஏதேனும் வெளிநாட்டு சதியா என்ற கோணத்தில் சந்தேகிக்கப்பட்டது. லெபனானின் அண்டை நாடான இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்தது.


பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து தற்போது பெய்ரூட்டில் போராட்டம் வெடித்து வருகிறது.

இதுவரை பெய்ரூட் குண்டுவெடிப்பில் 135 பேர் உயிரிழந்துள்ள நிலையில் லெபனானின் நட்பு நாடான பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரான் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். அவர்களது துயரை கேட்டறிந்தார்.

லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கடந்த 2016ம் ஆண்டு முதல் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். இவரது ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. சில ஆண்டுகளாக லெபனானில் இவரது எதிர்ப்பாளர்களால் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மைக்கேலின் அரசு லெபனானில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
பெய்ரூட் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர். மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை சீராக்க லெபனானின் நட்பு நாடான பிரான்ஸ் ஆவன செய்யும் என மேக்ரான் உறுதி அளித்தார். குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெபனான் குடிமக்களுக்கு உரிய மருத்துவ உதவி மற்றும் நிதி வழங்குவதாக உறுதி அளித்தார்.

குண்டு வெடிப்புக்குக் காரணமான அமோனியம் நைட்ரேட் ரசாயனம் கடந்த 6 வருடங்களாக கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கால் நெருப்பு பற்ற கூடிய இந்த ரசாயனம் அங்கேயே கிடப்பில் இருந்தது. இவர்களது அஜாக்கிரதையால் தற்போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்து 135 பேர் பலியாகியுள்ளனர், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என மைக்கேல் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மேல்மட்டக்குழுப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்

மூலக்கதை