கொரோனாவுக்கு விடைகொடுக்க திருப்பூர் தீவிரம்!

தினமலர்  தினமலர்
கொரோனாவுக்கு விடைகொடுக்க திருப்பூர் தீவிரம்!

திருப்பூர்:கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையில், திருப்பூர் மாவட்டம், தீவிரம் காட்டி வருகிறது.சுகாதார துறையினர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், சிறந்த தரத்திலான, தொற்றுப் பரிசோதனை மற்றும் தொற்றுள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சை முறைகளும் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பாக, கூட்டு மருந்து சிகிச்சை உள்ளிட்ட 12 வகை சிகிச்சை முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.தொற்று இருப்பதை முன்பே கண்டறிந்து, சிகிச்சையளித்தால்தான், பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்பதை, பொதுமக்களும் உணர வேண்டும்.கடும் சுவாச பிரச்னைகள் ஏற்படும் முன்பு, சிகிச்சைக்கு வந்தால் எளிதில் குணப்படுத்திவிட முடியும். அதேசமயம், ஐம்பது சதவீதத்திற்கும் மேல், சுவாசப்பிரச்னை இருப்பின், அபாயத்தில் இருந்து, நோயாளியை மீட்க, போராட வேண்டியிருக்கும்.இதனால்தான், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம், ஆக்சிஜன் அளவை அடிக்கடி பரிசோதித்து கொள்ளுமாறும், தெர்மல் மீட்டர் மூலம், உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறோம்.'அடுத்த அலை வரும்போது பாதிப்பு அதிகரிக்குமா, குறையுமா என்று அச்சப்படத் தேவையில்லை.
அடுத்த அலையைத் தடுக்க, ஒரே வழி முக கவசம், சமூக இடைவெளி கடைபிடிப்பது மட்டுமே. சுகாதாரத்துறையின் நடவடிக்கைக்கு மக்கள் தீவிர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று சுகாதாரத்துறை செயலர் கூறியுள்ளார்.
மழைக்காலம் துவங்கியுள்ளதால், டெங்கு உட்பட இதர நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகங்கள் களமிறங்கியிருக்கின்றன. மக்கள் ஒத்துழைப்புடன், திருப்பூர் மாவட்டம், கொரோனாவுக்கு 'குட்பை' சொல்வது உறுதி.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை