மக்கள் மீது அக்கறை! எம்.எல்.ஏ.,வுக்கா... அமைச்சருக்கா பாலம் சீரமைத்தால் தெரிந்து விடும்!

தினமலர்  தினமலர்
மக்கள் மீது அக்கறை! எம்.எல்.ஏ.,வுக்கா... அமைச்சருக்கா பாலம் சீரமைத்தால் தெரிந்து விடும்!

வெள்ளலூர்:வெள்ளலூர் -- சிங்காநல்லூர் ரோடு, நொய்யலாறு தரைமட்ட பாலம் எந்த நேரத்திலும், வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொகுதி எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டும் வேலை நடக்காததால், உள்ளாட்சித்துறை அமைச்சரை, இப்பகுதி மக்கள் நாடியுள்ளனர்.
அவராவது பாலத்தை சீரமைப்பாரா என பார்க்கலாம்.வெள்ளலூரிலிருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில், தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது. பாலத்தின் அடியில் நொய்யல் ஆறு பாய்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பாலத்தின் வழியாக பயணிக்கின்றனர்.நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது, இத்தரைமட்ட பாலம் மூழ்கி விடும். போக்குவரத்து பாதிக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாததால், தங்கள் தலைவிதியை நொந்தபடி, வாகன ஓட்டிகள் பல கி.மீ., சுற்றிச் செல்வர்.காலுக்கு கீழே ஆபத்து!நேற்று முன்தினம் வெள்ளம், பாலத்தின் அடிப்பகுதியை தொட்டு சென்றது. ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை, பாலத்தின் நடுவே சிக்கிக் கொள்ள, போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொக்லைன் உதவியுடன் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது; போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, நேரம் செல்ல, செல்ல வெள்ளத்தின் அளவு உயர்ந்தது. எந்த நேரத்திலும் பாலம் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று அவ்விடத்தில், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்தாண்டு இதே மாதம், 13ம் தேதி பாலம் வெள்ளத்தில் மூழ்கி சாலை, 10 அடி நீளத்துக்கு அரிக்கப்பட்டது. பாலத்தின் உயரத்தை அதிகரித்து, சாலையை சீரமைத்து தர, எம்.எல்.ஏ., கார்த்திக்கிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எதுவும் நடக்கவில்லை என்கின்றனர் மக்கள்.அமைச்சரிடம் கோரிக்கைஇப்பகுதியினர் கூறுகையில், '50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக, எம்.எல்.ஏ., கூறினார்.
ஓராண்டு முடியப்போகிறது. எதுவும் செய்யவில்லை. சாலை அரிப்பு ஏற்பட்ட இடத்தில், பெரிய குழிகள் ஏற்படும். அவ்வப்போது மண்ணை போட்டு நிரப்பி விடுவர். இரு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். உள்ளாட்சித்துறை அமைச்சரிடமும், கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் நிச்சயம் சீரமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.பார்ப்போமே... பிரச்னைக்கு யார் தீர்வு கண்டு, மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்று!

மூலக்கதை