உடற்பயிற்சி கூடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

தினமலர்  தினமலர்
உடற்பயிற்சி கூடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை; தமிழகத்தில், உடற்பயிற்சிக் கூடங்கள், 10ம் தேதி முதல் செயல்பட, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, வருவாய் துறை, நேற்று வெளியிட்டது.


அதில் கூறியிருப்பதாவது:நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள, உடற்பயிற்சிக் கூடங்கள், அப்பகுதி இயல்பான பகுதியாக அறிவிக்கப்படும் வரை திறக்கக் கூடாது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.உடற்பயிற்சிக் கூடத்தில், 50 வயதிற்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணியர், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது.

ஒவ்வொருவருக்கும் இடையே, 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, முகத்திற்கு கவசம் அணிந்து கொள்ளலாம். அடிக்கடி கைகளை சோப்பால் கழுவ வேண்டும். உடற்பயிற்சிக் கூடத்தில் துப்புவதை, தடை செய்ய வேண்டும்.


ஒரு குழுவுக்கும், மற்றொரு குழுவுக்கும் இடையே, குறைந்தது, 15 முதல், 30 நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வரும் பணியாளர்கள் உட்பட, யாரையும் அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.

மூலக்கதை