கிடங்கில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்; சென்னைக்கு ஆபத்து?

தினமலர்  தினமலர்
கிடங்கில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்; சென்னைக்கு ஆபத்து?

சென்னை: சென்னையில் உள்ள கிடங்கு ஒன்றில் இருப்பு வைக்கப்பட்டுள்ள, 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டால், மத்திய கிழக்கு நாடான லெபனானில் ஏற்பட்டது போல, பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக, சர்ச்சை எழுந்தள்ளது. இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் நேற்று, கிடங்கில் ஆய்வு நடத்தினார்.

மேற்கு ஆசிய நாடான, லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் துறைமுக பகுதியில் உள்ள, கிடங்கில் ஆறு ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டிருந்த, 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து, பெரும் விபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரமே புகை மண்டலமானது. இந்த விபத்தில், 100க்கும் மேலானார் பலியாகினர்; 4,000 பேருக்கு மேல் காயமுற்றனர்.

சென்னைக்கு ஆபத்து?


இந்நிலையில், சென்னையில் உள்ள கிடங்கில், 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து, ஐந்தாண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதும், அதனால் பேராபத்து ஏற்படலாம் என்றும், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

'லெபனான் விபத்திற்கு, அம்மோனியம் நைட்ரேட்தான் தான் காரணம். இதை உடனே அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு தேவைக்கு பயன்படுத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் ராமதாஸ், டுவிட்டரில் எச்சரித்து இருந்தார். இது, சென்னை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, சென்னைத் துறைமுகத்திற்குள் உள்ள கிடங்குகளில், போலீசார், தீயணைப்பு துறையினர், ஆய்வு நடத்தினர். துறைமுக நிர்வாகத்திலும் விசாரித்தனர். துறைமுகத்திற்குள் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்படவில்லை என்று தெளிவானது. அதேநேரம், உரிய ஆவணம் இல்லாமல், ஆறு ஆண்டுகளுக்கு முன், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, 740 டன் அம்மோனியம் நைட்ரேட், 37 கன்டெய்னர்களில், மணலி புதுநகர் அருகே உள்ள கிடங்கில், ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

தீயணைப்பு துறை டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள், கிடங்கிற்கு சென்றனர். விபத்து அபாயம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது, 'இருப்பு வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது; விபத்து ஏற்படும் நிலையில் இல்லை' என, சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விபரங்களையும் சேகரித்து, போலீஸ் அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

நாசவேலை?


இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அம்மோனியம் நைட்ரேட்டை, பயங்கரவாதிகள், நாச வேலைகளுக்கு பயன்படுத்துவதால், இதன் இறக்குமதிக்கு, 2012ல், மத்திய அரசு, தனி பாதுகாப்பு விதிகளை கொண்டு வந்தது. மத்திய அரசின் வெடிமருந்து துறை தலைமை கட்டுப்பாட்டாளரிடம் உரிமம் பெற்றால் தான், வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்ய முடியும்.

கரூரை சேர்ந்த தனியார் கெமிக்கல்ஸ் நிறுவனம், ஆறு ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து, கப்பல் வழியாக, சென்னை துறைமுகத்தில், அம்மோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்தது. உரிய ஆவணம் இல்லை என்ற காரணத்தால், பறிமுதல் செய்யப்பட்டு, கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது; ஆபத்து நேர வாய்ப்பில்லை. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கொரோனா பாதிப்பு காலம் முடிந்ததும், டெண்டர் விடப்பட்டு, அவை அப்புறப்படுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை