எதிர்பார்ப்பு! சென்டாக் இணையதளம் மேம்படுத்தப்படுமா?மத்திய அரசு வழங்கிய நிதியை செலவிடாத அவலம்

தினமலர்  தினமலர்
எதிர்பார்ப்பு! சென்டாக் இணையதளம் மேம்படுத்தப்படுமா?மத்திய அரசு வழங்கிய நிதியை செலவிடாத அவலம்

புதுச்சேரி! 'நீட்' அல்லாத தொழிற்படிப்புகளுக்கும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் ஒரே குடையின் கீழ் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் திட்டம், கடந்த 2018-19ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆன் லைன் மூலமாக விண்ணப்பிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.இருந்தபோதும், ஆன்லைன் சேர்க்கை நடைமுறையில் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பதாலும், அனைத்தும் வெளிப்படையாக நடக்கும் என்பதாலும், சிரமத்தை பொருட்படுத்தாமல் மாணவர்களும், பெற்றோர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.தற்போது, மூன்றாவது ஆண்டாக, 'சென்டாக்' மூலமாக ஆன்லைன் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

சென்டாக் இணையதள 'சர்வர்' மெதுவாக இயங்குவதால், ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை எழுகிறது. இதனால், பல நாட்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதற்கு பல மணி நேரமாகி விடுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்தில், சென்டாக் இணைய தள சாப்ட்வேரை மேம்படுத்த மத்திய அரசின் உதவி கோரப்பட்டது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்த திட்டத்திற்கு 'கிரீன் சிக்னல்' காட்டிய மத்திய அரசு, சென்டாக் இணையதள சாப்ட்வேரை மேம்படுத்துவதற்காக ரூ.1 கோடிக்கும் மேலாக நிதியுதவி அளிப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இதில், முதல்கட்டமாக, ரூ.80 லட்சம் புதுச்சேரி அரசுக்கு கடந்தாண்டே வந்து விட்டது. சாப்ட்வேரை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், கல்லுாரி மாணவர்களின் தினசரி வருகை பதிவேடு, மாணவர்கள் விடுப்பு எடுத்தால் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது, மதிப்பெண் விபரங்கள், பேராசிரியர்கள் பாடம் எடுக்கும் நேரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை உள்ளடக்கிய கல்லுாரி மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் சேர்த்து நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவி வந்து பல மாதங்கள் கடந்தபோதும், சென்டாக் சாப்ட்வேரை மேம்படுத்தும் பணிகள் இதுவரை துவக்கப்படவில்லை. கல்லுாரி மேலாண்மை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, சென்டாக் சாப்ட்வேரை மேம்படுத்தவும், கல்லுாரி மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு வழங்கிய நிதியுதவியை செலவு செய்ய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை