4,227! கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு...6 நாட்களில் மட்டும் 1,144 பேருக்கு தொற்று

தினமலர்  தினமலர்
4,227! கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு...6 நாட்களில் மட்டும் 1,144 பேருக்கு தொற்று

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த ஆறு நாட்களில் மட்டும் 1,144 பேர் பாதித்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 4,227 ஆக உள்ள நிலையில், இதுவரை 54 பேர் இறந்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்து, கிருமி நாசினி தெளித்து, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர், முக கவசம் அணியாதோர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அபாராதம் விதிப்பதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதன் முதலாக 3 பேர் கொரோனா தொற்றால் பாதித்தனர். தற்போது, டாக்டர்கள், போலீசார், செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். முதல் மூன்று மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது. அப்போது இறப்பு 12 ஆக இருந்தது. பாதிப்பு அதிகரிப்புகடந்த ஜூன் மாதம் 28 ம் தேதி 1,003 இருந்த பாதிப்பு, அடுத்த இரண்டு வாரத்தில் (ஜூலை 11ம் தேதி) 1,505 ஆக உயர்ந்தது. அடுத்த 12 நாட்களில் (23ம் தேதி) 2067 ஆக அதிகரித்தது.

அடுத்த நான்கு நாட்களில் (23 ம் தேதி) 2,521 ஆகவும், அதற்கு அடுத்த நான்கு நாட்களில் 3,083 ஆகவும் அதிகரித்தது.கடந்த ஆக., 1ம் தேதி 182 பேரும்; 2ம் தேதி 144; 3ம் தேதி 166; 4ம் தேதி அதிகபட்சமாக 264; 5ம் தேதி 171; நேற்று 6ம் தேதி 217 பேர், என ஆறு நாட்களில் மட்டும் 1,144 பேர் பாதித்துள்ளனர். மக்கள் அலட்சியம்பொது மக்கள் மத்தியில் அலட்சியம், இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்வது, கடைகள், வணிக நிறுவனங்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. முக கவசம் அணியால் சுற்றித் திரிவது, கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் தொற்று அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் மாவட்ட நிர்வாகம், போலீசாரின் கடுமையான நடவடிக்கையால் பாதிப்பு குறைவாகவே இருந்தது. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன், தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் மெத்தனம், பொது மக்கள் அலட்சியத்ததால், தொற்று அதிகரித்து வருகிறது. பருவ மழை துவங்க உள்ள நிலையில், பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. 52 பேர் பலி மாவட்டம் முழுவதும் இது வரை 54 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், பாதிக்கப்பட்ட 4,227 பேரில், நேற்று வரை 2,257 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 62 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் 68 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் வரை 12 ஆக இறந்த உயரிழப்பு, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40க்கும் மேல் அதிகரித்து, 54 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை