அமெரிக்காவில் கொரோனா பெயரில் மோசடி அதிகரிப்பு: 100 மில்லியன் டாலர் இழப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் கொரோனா பெயரில் மோசடி அதிகரிப்பு: 100 மில்லியன் டாலர் இழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவ துவங்கிய மார்ச் மாதத்தில் இருந்து, கொரோனா பெயரில் நடக்கும் மோசடி இருமடங்காக அதிகரித்துள்ளது. மோசடியால் 100 மில்லியன் டாலரை இழந்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் குடிசைத்தொழில் போன்று குற்றங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா, புளோரிடா, நியூயார்க், டெக்சாஸ், பெல்சில்வேனியா ஆகிய ஐந்து மாகாணங்களை குறிவைத்து, கொரோனா பெயரில் மோசடிகள் அதிக எண்ணிக்கையில் அரங்கேறியுள்ளன.


உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொற்றை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்த மார்ச் மாத மத்தியில் இருந்து, அமெரிக்காவில் பதிவான கொரோனா தொடர்பான மோசடிகளில், 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட புகார்களில், இந்த ஐந்து மாகாணங்கள் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளன. மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 97.5 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என, மத்திய வர்த்தக ஆணையம் (எஃப்.டி.சி.,) தெரிவித்துள்ளது.


அரசு நிதி தருவதாக தகவல் திருட்டு


'கொரோனா தொற்றுக்கு மத்தியில், விரக்தியில் உள்ள வேலையிழந்துள்ளவர்களுக்கு அரசின் நிதி தொகுப்பை அளிப்பதாக, தனிப்பட்ட நபரின் தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களை மெசேஜ், மின்னஞ்சல்கள், அழைப்புகள் மூலம் திருடுவது அதிகரித்து வருகிறது. விலை நிர்ணயம் மற்றும் பிற நுகர்வோர் தயாரிப்பு மோசடிகளிலும் பரவலாகி வருகிறது' என, ஆன்லைனில் நடக்கும் மோசடியை தவிர்க்க உதவும் இணையதளமான சோசியல்பிஷ்.காம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை