'இலங்கை பார்லி., தேர்தல்; ராஜபக்சே கட்சி முன்னிலை

தினமலர்  தினமலர்
இலங்கை பார்லி., தேர்தல்; ராஜபக்சே கட்சி முன்னிலை

கொழும்பு: இலங்கையில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. இதில், 'மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவோம்' என, மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல இடங்களில் அவரது கட்சியே முன்னிலை வகிக்கிறது.



இலங்கையில் மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 16வது நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பி.,க்களில் 196 பேர் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் கட்சியின் வாக்கு சதவீதத்துக்கு ஏற்றார்போல் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஏறக்குறைய 1.60 கோடி மக்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்துள்ளனர். மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க, 8,000 சுகாதாரக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.


இதன் மூலம், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் உலகில் முதல்முறையாக தேர்தல் நடத்திய நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றது.தேர்தலில் வாக்களிக்க வந்த மக்கள் முகக்கவசம் அணிந்தும், வாக்களிக்க வரும் மக்களுக்கு சானிடைசிங் அளித்தும் பாதுகாப்பாக வாக்குப்பதிவு நடந்தது. காலை 7:00 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5:00 மணி வரை நடந்தது. 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாலை முதற்கட்ட முடிவு!


தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்தா தேசப்பிரியா கூறுகையில், ''கொரோனா வைரஸ் அச்சத்துக்கு மத்தியில் தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. முதல்கட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று இரவுக்குள் அல்லது நாளை காலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும்' எனத் தெரிவித்தார்.



இதற்கிடையே, இலங்கை மக்கள் கட்சியின் (எஸ்.எல்.பி.பி.,) தேசிய ஒருங்கிணைப்பாளரும் கோத்தபாய ராஜகபக்சேயின் சகோதரருமான பசில் ராஜபக்சே கூறுகையில், 'எங்கள் கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்' எனத் தெரிவித்தார்.

தேர்தல் களக் கணிப்புகளின்படி 225 இடங்களில் பெரும்பாலன இடங்களை மகிந்தா ராஜபக்சேவின் எஸ்.எல்.பி.பி., கட்சி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மீண்டும் எஸ்எல்பிபி ஆட்சி அமைந்தால் 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அதிபர் அதிகாரங்களை முடிவு செய்யும் சட்டத்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவோம்' என, அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை