புதிய கல்வி கொள்கை இந்திய மொழிகளை காக்க உதவும்: வெங்கய்ய நாயுடு பாராட்டு

தினகரன்  தினகரன்
புதிய கல்வி கொள்கை இந்திய மொழிகளை காக்க உதவும்: வெங்கய்ய நாயுடு பாராட்டு

டெல்லி: பாடதிட்டத்தின் அளவைக் குறைத்து மாணவர்களின் சுமையை குறைத்ததிற்காக இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று புதிய கல்வி கொள்கையை பாராட்டினார். உடல்ரீதியான செயல்பாடுகள், விளையாட்டு ஆகியவற்றுக்கும் சமமான முக்கியத்துவம் தரும் வகையில் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். ஆரம்ப வயதில் இருந்தே பள்ளிப் பாடதிட்டத்தின் உள்ளார்ந்த அங்கமாக யோகாவை இணைக்க வேண்டும் என்று கூறிய அவர், மாணவர்கள் வகுப்பறைகளிலும் விளையாட்டு மைதானங்களிலும் சமமான நேரத்தைச் செலவிட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.\r சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு கொண்டதோர் ஆவணம் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அது முக்கியத்துவம் தருகிறது என்று கூறினார். புதிய கல்விக் கொள்கை 2020 கற்பவர்களை மையமாகக் கொண்டுள்ளது என்று மேலும் குறிப்பிட்ட அவர், இந்தியாவை அறிவுபூர்வமானதொரு சமூகமாக மாற்றுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\r புதிய கல்விக் கொள்கை 2020 தாய்மொழிக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த வெங்கய்ய நாயுடு நமது இந்தியாவின் செழுமையான மொழிகளைப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். \r கல்வியின் தரங்களை உயர்த்த வேண்டியதன் தேவையையும், ஆசிரியர்களின் தொழில்முறையிலான திறமையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய வெங்கய்ய நாயுடு ஆசிரியர்கள் நட்புணர்வு கொண்ட வழிகாட்டிகளாகவும் தங்களின் நடத்தை, அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு முன்மாதிரிகளாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\r பள்ளிகளில் இந்தியாவின் கலைகள், கலாச்சார பாரம்பரியம் ஆகியவை குறித்த புரிதல், பாராட்டுணர்வு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மாணவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் தனித்தன்மை, அதன் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றை அறிந்தவர்களாக இருப்பதோடு, தேசிய வாத சித்திரத்தின் உச்சகட்ட அடையாளமாகவே பாரதமாதா இருக்கிறார் என்பதையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மூலக்கதை