அயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..!!

தினகரன்  தினகரன்
அயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..!!

டெல்லி: இந்தியாவில் நீண்ட கால சட்டப்போராட்டத்திற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோயில் கட்ட அனுமதி அளித்த இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறைபாடு உள்ளது என்று கூறியிருந்தது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது  தாக்குதல் நடத்துவது வளர்ந்து வருவதையும் இந்த தீர்ப்பு காட்டுவதாகவும் தெரிவித்திருந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது குறித்த பாகிஸ்தானின் விமர்சனத்தை இந்தியா இன்று கடுமையாக நிராகரித்ததோடு, அண்டை நாட்டை வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகி நிற்குமாறு கேட்டுக் கொண்டது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டார்.மேலும், இதுகுறித்து அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: பாகிஸ்தானின் அறிக்கையை இந்தியாவுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தில் நாங்கள் கண்டிருக்கிறோம். பாகிஸ்தான்  இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகி இருக்க வேண்டும். இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் அதன் சொந்த சிறுபான்மையினரின் மத உரிமைகளை மறுக்கும் ஒரு தேசத்தின் ஆச்சரியமான நிலைப்பாடு அல்ல என்றாலும், இதுபோன்ற கருத்துக்கள் ஆழ்ந்த வருந்தத்தக்கவை என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை