உண்ணிகள் மூலம் சீனாவில் பரவும் புது வகை வைரஸ்: 7 பேர் பலி, 60 பாதிப்பு

தினமலர்  தினமலர்
உண்ணிகள் மூலம் சீனாவில் பரவும் புது வகை வைரஸ்: 7 பேர் பலி, 60 பாதிப்பு

பீஜிங்: சீனாவில் உண்ணிகள் மூலம் பரவும் வைரஸால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் பாதிப்பு அடைந்தனர்.

உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கியது. கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 2 கோடியை எட்டி வருகிறது.
இந்நிலையில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு, அன்ஹூய் மாகாணங்களில் டிக்- போர்னே எனப்படும் புதுவகை வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலால் இது வரை 7 பேர் பலியானதுடன் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த நஞ்சிங் என்ற பெண் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையின் போது கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. ஆனால், தொடர் சிகிச்சைக்குப் பிறகும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவரது ரத்தத்தில் வெள்ளயைணுக்கள் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மாத தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து அவர் வீடு திரும்பினார். .

அதன் பின் அவரைப் போலவே பலரும் வெள்ளையணு மற்றும் தட்டு அணு குறைபாட்டால் மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டனர். இந்த வகை அறிகுறிகள் ,Severe Fever with Thrombocytopenia Syndrome, என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் ரத்த மாதிரி பரிசோதனையில் அவர்கள் புதுவகை வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இந்த வகை வைரஸ் 'SEFT Virus' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இவ்வகை வைரஸ் சீனாவில் 2011ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அது பரவ ஆரம்பித்துள்ளது.


டிக்-போர்னே வைரஸ் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ' இவ்வகை வைரஸ்கள் கொரோனா அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வைரஸ் உண்ணிகள் மற்றும் ஈக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவியுள்ளது. மேலும், ரத்தம், சளி மூலமாகவும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது' இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை