சீனாவுடன் தொடர்புடைய 2,500 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்

தினமலர்  தினமலர்
சீனாவுடன் தொடர்புடைய 2,500 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்

கலிபோர்னியா: தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்ட, சீனாவுடன் தொடர்புடைய 2,500க்கும் மேற்பட்ட 'யூடியூப் சேனல்'களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனத்தின் 'வீடியோ' பகிர்வு தளம் தான் யூடியூப். அதில் சீனாவுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் வெளியாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து அவற்றைக் களையெடுக்கும் நடவடிக்கையை கூகுள் தொடங்கியுள்ளது.இதுகுறித்த காலாண்டு அறிக்கையில், 'கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக, யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட பெரும்பாலான சேனல்களில், தேவையற்ற அல்லது அரசியல் சாராத உள்ளடக்கம் இருந்துள்ளன. ஆனால் சில எண்ணிக்கையிலான சேனல்களில், அரசியல் தொடர்புள்ள உள்ளடக்கங்கள் இருந்தன' என, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


நீக்கப்பட்ட 2,500 சேனல்கள் குறித்த அடையாளத்தை கூகுள் வெளிடவில்லை. ஆனால், சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமான கிராபிகாவால், கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் காணப்பட்ட, தவறான பிரசாரத்துடன் தொடர்புடைய சேனல்களைத் தான் கூகுள் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் தவறான தகவல்களை பரப்புவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா ஏற்கனவே மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் பிரச்சாரம்

'கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ரஷ்யாவுடன் தொடர்பில் உள்ள நடிகர்கள், அமெரிக்க அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் மனதை மாற்றும் தன்மையிலும் நூற்றுக்கணக்கான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக புகார் கூறப்பட்டது. அதே போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க, கடந்த 4 ஆண்டுகளாக கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் பிரச்சாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை அளித்து வருகின்றன' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை