விநியோகத்திற்கு தயாராகும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி - விலை ரூ.2,800

தினமலர்  தினமலர்
விநியோகத்திற்கு தயாராகும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி  விலை ரூ.2,800

மாசாசூசெட்ஸ்: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறுதி கட்டத்தில் இருக்கும் அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா, தடுப்பூசியின் விலை ஆரம்பத்தில் ரூ.2,800 வரை இருக்கும் என கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக ஒரு சிறந்த தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான முயற்சியை உலகெங்கிலும் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் வேகப்படுத்தியுள்ளன. கொரோனாவால் இதுவரை ஒரு கோடியே 87 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் ஒரு கோடியே 13 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள மாடர்னா நிறுவனம், இந்த போட்டியில் முன்னணியில் உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அமெரிக்க அரசு ரூ.7.5 கோடி நிதியை இந்நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது.


இரண்டு கட்ட சோதனைகளில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை இந்நிறுவனத்தின் எம்ஆர்என்ஏ-1273 தடுப்பூசி உண்டாக்கியது. தற்போது இம்மருந்தை 30,000 பேருக்கு செலுத்தி இறுதி கட்ட சோதனை செய்கின்றனர். ஜூலை 27-ம் தேதி தொடங்கிய இச்சோதனை செப்டம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தடுப்பூசிக்காக பல்வேறு நாடுகள் ரூ.3 ஆயிரம் கோடியை இந்நிறுவனத்தில் டெபாசிட் செய்துள்ளன.

இது குறித்து நிறுவனத்தின் சி.இ.ஓ., செபேன் பேன்செல் கூறியதாவது: பணத்தை பொருட்படுத்தாமல் தடுப்பூசியை அனைவருக்கும் உறுதிப்படுத்தும் பணியில் உலக நாடுகளின் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது போல் நாம் பெருந்தொற்று காலத்தில் இருக்கிறோம். இந்த சூழலில் தடுப்பூசியின் விலை ரூ.2,400 முதல் ரூ.2,800-க்குள் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

வைரஸ் தானாக மாயமாகாது. மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்கும். இவ்விலை தடுப்பூசியின் மதிப்பை விட மிகக் குறைவாகும். பெருந்தொற்று முடிந்து வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போது சந்தை மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை