'கொரோனா கட்டுப்பாட்டில் தான் உள்ளது': டிரம்ப்

தினமலர்  தினமலர்
கொரோனா கட்டுப்பாட்டில் தான் உள்ளது: டிரம்ப்

வாஷிங்டன்: கொரோன வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணறி வருகிறது. ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பல நாடுகள், முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தீவிர நடவடிக்கைகளால், வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன. ஆனால், அலட்சியமாக இருந்த பல நாடுகளில் கொரோனா கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த முடியாமல் இந்த நாடுகள் தற்போது திணறி வருகின்றன.


15 விநாடிக்கு ஒருவர் உயிரிழப்பு!


இந்த நிலையில், கடந்த இரு வார தரவுகளின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் சுமார் 5,900 பேர் உயிரிழந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்கின்படி, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 247 பேர்; அதாவது 15 விநாடிக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.


இதில் குறிப்பாக, அமெரிக்கா தான் கொரோனா வைரசால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அங்கு இதுவரை, 1.55 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ''மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் எதையும் செய்யவில்லை என்று அர்த்தமாகாது. கொரோனாவை எவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இது ஒரு பயங்கரமான தொற்று நோய்,'' என, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை