தொலைதூர பணியமர்த்துதலை நோக்கி நகரும் நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
தொலைதூர பணியமர்த்துதலை நோக்கி நகரும் நிறுவனங்கள்

புதுடில்லி: இந்தியாவில் உள்ள நான்கு நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள் தொலைதூரத்தில் உள்ள பணியாளர்களை திறமையாக பணியமர்த்த முடியுமென நம்பிக்கையுடன் இருப்பதாக தனியார் அமைப்பு நடத்திய சர்வே ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பணியமர்த்துதல் ஓர் பார்வை என்ற தலைப்பில் பல்வேறு நகரங்களை சேர்ந்த 114 மனித வள மேம்பாட்டுத்துறை அலுவலர்கள் சர்வேயில் பங்கேற்றனர். இதில், இ-காமர்ஸ் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சேவை, அறிவியல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகள், 82 சதவீதம் அளவிற்கு தொலைதூரத்தில் உள்ள ஆட்களை வேலைக்கு எடுப்பதில் தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு பல்வேறு துறைகளில் நடைமுறையில் உள்ள பல வர்த்தக நடைமுறைகளை மாற்றியமைத்துள்ளது. தற்போது நிறுவனங்கள், தொலைதூரத்தில் இருந்தப்படி பணியமர்த்துதல் நடைமுறையை தழுவியுள்ளன. இந்த சர்வே முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பகுதி நேரமாக அடுத்த 3 மாதங்களுக்கு பணியமர்த்துதலுக்கு திட்டங்களை வைத்துள்ளன.

அநேகமாக, மூன்றாவது காலாண்டில் படிப்படியாக துவங்குமென தெரிகிறது. மேலும் 18 சதவீத நிறுவனங்கள், இரண்டாவது காலாண்டில் பணியமர்த்துதல் திட்டங்களை வைத்துள்ளதோடு, மூன்றாவது காலாண்டில் அவற்றை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தவும் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையில், இரண்டாவது காலாண்டில் பணியமர்த்தல் முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய 18 சதவீத நிறுவனங்கள் மூன்றாவது காலாண்டில் 8 சதவீதம் ஆக குறைந்துள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் பணியமர்த்துதல் குறைந்து வருவதை கணக்கில் கொண்டால், ஏப்ரல் 2021 க்குள் பணியமர்த்தல் வேகம், கொரோனாவுக்கு முந்தைய நிலைகளைத் தொட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இதில் தொலைதூர பணியமர்த்தல் முதன்மையாக இருக்கும். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக கல்வி அட்டவணையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவன வளாகங்களில் நடக்கும் வளாக நேர்காணலும் பாதிக்கப்படும். பொருளாதார மீட்சி துவங்கும் போது, நிறுவனங்கள் தங்களது திட்டங்களை மீண்டும் துவக்குமென கூறப்பட்டுள்ளது.

சர்வேயில் பங்கேற்ற நிபுணர்கள், அடுத்தாண்டு ஜனவரி முதல் பணியமர்த்தல் பணிகள் முழு வேகத்தில் துவங்குமென எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு ஏப்ரல் அளவுக்கு பணியமர்த்தலுக்கு 2021ல் ஏப்ரல் மாதம் ஆகுமெனவும், 43 சதவீத நிறுவனங்கள் தங்களது ஜனவரியில் இருந்து முழு வேகத்தில் துவங்குமெனவும், 12 சதவீத நிறுவனங்கள் ஏப்ரல் 2021முதல் துவங்குமென எதிர்பார்க்கின்றன. கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவோர் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைய கூடும். மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள், தங்கள் கேம்பஸ் இண்டர்வியூ திட்டங்களில் எந்த மாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லையெனவும், 36 சதவீத நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பதை குறைப்போமென தெரிவித்துள்ளன.

மூலக்கதை